Published : 22 Mar 2024 09:07 PM
Last Updated : 22 Mar 2024 09:07 PM
பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு: பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வுக்குப் பின் தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அரசியல் சட்டத்தின் காவலரான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயகச் சிதைவையும், கூட்டாட்சியின் மறைவையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டுக்கு முன் கூர்முனைகளை இடும் தவறான சாகசங்களையும், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டதையும் இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தல் மக்களாட்சியைக் காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் மிக முக்கியமானது. நமது புகழ்மிகு நாட்டை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார அத்துமீறலைத் தடுக்கக் கடுமையாகப் பாடுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில் மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை என்பது முதலான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
பாஜகவின் 15 வேட்பாளர்கள் அறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் (தனி) - பொன்.பாலகணபதி, வட சென்னை - பால் கனகராஜ், தி.மலை - அஸ்வத்தாமன், நாமக்கல்ல் - கே.பி.ராமலிங்கம், திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி - கே.வசந்தராஜன், கரூர் - வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) - பி.கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) - எஸ்ஜிஎம் ரமேஷ், தஞ்சை - எம்.முருகானந்தம், சிவகங்கை - தேவநாதன் யாதவ், மதுரை - இராம சீனிவாசன், விருதுநகர் - ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) - ஜான் பாண்டியன், புதுச்சேரி - நமச்சிவாயம் போட்டியிடுகின்றனர்.
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம், சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் போட்டியிடுகின்றனர்.
விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். திருவள்ளூர் (தனி) - கு.நல்லதம்பி, மத்திய சென்னை - ப.பார்த்தசாரதி, கடலூர் - சிவக்கொழுந்து, தஞ்சாவூர் - சிவநேசன் போட்டியிடுகின்றனர்.
தமாகவின் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு: பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு: நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேஜ்ரிவால் கைது: தலைவர்கள் கண்டனம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான மூர்க்கத்தனமான, அப்பட்டமான தாக்குதல் இது. நமது இண்டியா கூட்டணி இன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முறையிடும்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “நீங்கள் கேஜ்ரிவாலை கைது செய்யலாம். அவரது சிந்தனையை எவ்வாறு கைது செய்ய முடியும். கேஜ்ரிவால் தனி நபர் அல்ல. அவர் ஒரு சிந்தனை; கொள்கை. அவருக்கு ஆதரவாக நாங்கள் பாறையைப் போன்று நிற்போம். புரட்சி ஓங்குக” என தெரிவித்துள்ளார்.
“10 ஆண்டு கால பாசிச பாஜக அரசின் தோல்வி மற்றும் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தோல்வி பயத்தாலும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளது மத்திய அரசு” என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், “ஜனநாயகத்துக்கு எதிரான இந்த வன்முறை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேஜ்ரிவால் கைது: டெல்லியில் ஆம் ஆத்மி தீவிர போராட்டம்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை முன்னிட்டு டெல்லியில் போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருந்தனர். டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டிருந்தது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டம் காரணமாக பல சாலைகளை போலீஸார் மூடியதால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2ஜி வழக்கு மேல்முறையீட்டை ஏற்ற டெல்லி ஐகோர்ட்: 2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் வெள்ளிக்கிழமை அறிவித்தது. மே மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேஜ்ரிவால் கைது: அன்னா ஹசாரே கருத்து: “அரவிந்த் கேஜ்ரிவாலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். மதுவுக்கு எதிராக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்; குரல் கொடுத்தவர். தற்போது அவர் மதுபான கொள்கைகளை வகுத்து வருகிறார். கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்” என சமூக ஆர்வலர் அன்னா அசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பாஜக தனித்துப் போட்டி: ஒடிசாவில் பாஜக தனித்தே பாட்டியிட இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமால் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிஜு ஜனதா தளம் உடனான கூட்டணி கைகூடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கேஜ்ரிவாலுக்கு 10 நாள் காவல் கோரும் அமலாக்கத் துறை: ‘டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடையவர்களில் முக்கியமானவர் என்பதால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மனு மீது மார்ச் 28-ல் தீர்ப்பு : அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை மார்ச் 28-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தென்காசி தொகுதியை கைப்பற்றிய ஜான் பாண்டியன்: பாஜக கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் ஸ்டார்ட்-அப் பிரிவு தலைவர் ஆனந்தன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட முயற்சி செய்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT