

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை என்பது போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையின் கவனிக்கத்தக்க அம்சங்கள்:
> மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு விகிதத்தை 75:25 சதவீதமாக மாற்றி அமைக்கவும், மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான தொகையை அதிகரிக்கவும், மத்திய அரசு வழங்கும் தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் சம நீதியோடு திட்டங்கள் கிடைக்கவும் வலியுறுத்தல்.
> கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தல்.
> மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாற்றுத் தேர்வு முறை. நீட்டுக்கு மாற்றாக +2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை முறை.
> சாயப் பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ``ஹைடெக் சுத்திகரிப்பு’’ நிலையங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.
> விவசாயத்தை உயிர்நாடியாக காக்கும் வகையில், தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதல், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விதை உற்பத்தி மானியம், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 6,000த்தை ரூ. 12,000ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை உள்ளிட்டவை.
> மத்திய - மாநில அரசுகளிடையேயான நிதி பகிர்வு சமநிலையில் இருக்கவும் 2026-க்கு பிறகு பொருட்கள் மற்றும் சேவை வரியோடு செஸ் வரியை இணைக்கவும் வலியுறுத்தல்.
> மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை.
> இளைஞர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம், திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை; வேலைக்கு ஏற்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை.