Last Updated : 14 Feb, 2018 09:39 AM

 

Published : 14 Feb 2018 09:39 AM
Last Updated : 14 Feb 2018 09:39 AM

ஜல்லிக்கட்டு காளைகள் ‘அண்டர் அரெஸ்ட்’

பா

ய்ந்து சென்று பிடிப்பது, ஓடிச்சென்று பிடிப்பது, சுற்றி வளைத்துப் பிடிப்பது.. இதெல்லாம் போலீஸுக்கு வழக்கம்தான். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு காவலர் இப்படியெல்லாம் பல முயற்சிகளைச் செய்து ஜல்லிக்கட்டு காளைகளைப் பிடித்து, பரிசுகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்.

திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர் மாவட்டங்களில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் தவறாமல் ஆஜராகிவிடுபவர் முதல்நிலைக் காவ லர் ராமச்சந்திரன். இவரது சொந்த ஊரான முடிகொண்டான் கிராமம், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது. பிஎஸ்சி பிஸிகல் எஜுகேஷன் படித்துள்ள இவர், அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

750 காளைகள்

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொண்டு 750-க்கும் மேற்பட்ட காளைகளுடன் களத் தில் மல்லுக்கட்டியுள்ளார். அதில், வெற்றியும் பெற்று 14 தங்கக்காசுகள், 30-க்கும் மேற்பட்ட வெள்ளிக் காசுகள், சைக்கிள், ஃபேன் என ஏராளமான பரிசுகளையும் குவித்திருக்கிறார்.

‘‘நான் காவல் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பெரும்பாலும், பணி முடிந்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்திலேயே ஜல்லிக்கட்டுக்குச் செல்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில், எனக்கு வழங்கப்படும் விடுமுறை நாட்களை மாற்றிக்கொண்டு, ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறேன். தற்போதும் ஜல்லிக்கட்டு எங்கே நடக்கிறது என்பது குறித்த தகவலை நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டு, தவறாமல் கலந்து கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு போட்டியை சிறு வயதிலேயே ஆர்வத்துடன் பார்ப்பேன். அதில் கலந்துகொள்ள தகுதி பெறும் வயது வந்ததும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டேன். அப்போது நண்பர்கள் உற்சாகப்படுத்தினர். தற்போது, குடும்பத்தினரும் எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர்.

சில நேரங்களில் பெரிய காளைகள் அவிழ்த்துவிடப்படும்போது, சிலர் ஒதுங்கிக்கொண்டு, என்னை உற்சாகப்படுத்துவார்கள். அது எனக்குத் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கும். அந்த நம்பிக்கையிலேயே காளையையும் அடக்கி பரிசையும் பெற்றுவிடுவேன்’’ என்று கூறும் ராமச்சந்திரன் ஜல்லிக்கட்டுக்குப் போனால் வெறும் கையோடு வீடு திரும்பியதே இல்லையாம்.

இந்த ஆண்டுகூட, பொங்கலுக்குப் பிறகு நடந்த 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, அனைத்து போட்டிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பரிசுகளை வென்றதாக பெருமிதத்தோடு கூறு கிறார்.

கூடவே, ஜல்லிக்கட்டு காளை கள் பற்றி புதியவர்களுக்காக ஒரு டிப்ஸ் தருகிறார். ‘‘வாடிவாசலில் திறக்கப்பட்டதும், காளைகள் ஆக்ரோஷமாக ஓடி வந்தாலும், வீரர்களிடம் இருந்து தப்பிச் செல்லவே அதிகம் முயற்சி செய்யும். எனவே, காளையின் நடவடிக்கையை நுணுக்கமாக கண்காணித்தால் போதும். எந்த காளை யாக இருந்தாலும் அடக்கி விடலாம்’’ என்கிறார் கம்பீரமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x