“அமலாக்கத் துறையும், ஐ.டி.யும்தான் பாஜாகவின் அதிகாரபூர்வ கூட்டணி” - முத்தரசன் விமர்சனம்

முத்தரசன் | கோப்புப்படம்
முத்தரசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

ராஜபாளையம்: "அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும்தான் பாஜாகவின் அதிகாரபூர்வ கூட்டணி. பாஜகவின் பேச்சைக் கேட்காதவர்களுக்கு எதிராக சோதனை நடத்தப்படுகிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியது: "பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். தீர்ப்பை எதிர்த்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமானம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரைத்த நிலையில், அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே நிலுவை மசோதாக்கள் குறித்த வழக்கில் ஆளுநர், அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

அதன்பின் முதல்வர் ஆளுநரை சந்தித்து பேசினார். ஆனால், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போலவே ஆளுநரின் செயல்பாடு தொடர்கிறது. ஆளுநர் சட்டத்தை மதிப்பவர் என்றால் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லை என்றால் குடியரசு தலைவர் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அதிமுக, பாஜக உடன் சேரவில்லை என்பதால் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் தான் பாஜகவின் அதிகாரப்பூர்வமான கூட்டணி.

இந்தத் தேர்தல் மத்தியில் ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அது நாட்டு மக்களின் பிரச்சினைகளை எதிரொளிக்கக் கூடியது.

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் போது, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பெட்ரோல் விலை உயர்த்தும் போது, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்கிறது என்ற மத்திய பாஜக அரசு தற்போது, பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம்" என்று அவர் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, முன்னள் எம்எல்ஏக்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in