நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அறிவிப்பு

லோகேஷ் தமிழ்செல்வன்
லோகேஷ் தமிழ்செல்வன்
Updated on
1 min read

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் ப.தனபால் இவரது தந்தை. லோகேஷ் தமிழ்செல்வன் முதன்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பி.காம் எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார். லோகேஷின் மனைவி லோ. தங்கபூர்ணிமா. இந்த தம்பதிக்கு நிகேஷ் தமிழ்செல்வன், பத்மேஷ் தமிழ்செல்வன் என இரு மகன்கள் உள்ளனர். சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது மாமனார் நாமக்கல் அருணாச்சலம் என்பவர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவின் அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான் இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற பெயர் வைத்தார். இவரது திருமணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடவுள்ளது தொகுதியில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in