Published : 21 Mar 2024 10:09 AM
Last Updated : 21 Mar 2024 10:09 AM

திமுகவில் வாய்ப்பை இழந்த 10 எம்பிக்கள் - 11 புதுமுகங்களை களமிறக்கிய ஸ்டாலின்

திமுகவில் கடந்த முறை எம்.பி.க்களாக இருந்த 10 பேருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், 11 புதுமுகங்களை திமுக தலைவர் ஸ்டாலின் களமிறக்கியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

போட்டிகளத்தை கருத்தில் கொண்டே, ஆளும் திமுக தனது தலைமையிலான இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. அந்த வகையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

கடந்த 2019 தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது, இம்முறை கூட்டணியில் ஐஜேகே இல்லாததால் பெரம்பலூர் தொகுதியையும் சேர்த்து 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல், சில தொகுதிகளையும் மாற்றியுள்ளது. திருநெல்வேலி, கடலூர், மயிலாடுதுறையை காங்கிரஸ் கட்சிக்கும் திண்டுக்கல்லை மார்க்சிஸ்ட் கட்சிக்கும் கொடுத்துள்ளது.

அதற்கு பதில், கோவையை மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருந்தும் தேனி, ஆரணியை காங்கிரஸிடம் இருந்தும் பெற்றுள்ளது. ஈரோட்டை மதிமுகவிடம் இருந்து பெற்று, தன் வசம் வைத்துக் கொண்டு, காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்று மதிமுகவுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 21 தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி, தற்போதுள்ள ‘சிட்டிங்’ எம்.பி.க்கள், கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்க பாண்டியன் (தென் சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர்ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை ) ஆ.ராசா (நீலகிரி), கனிமொழி (தூத்துக்குடி) ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 11 தொகுதிகளில், தற்போது எம்பிக்களாக உள்ள 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டதால் டி.ஆர்.வி.எஸ். ஸ்ரீரமேஷ் (கடலூர்), சே.ராமலிங்கம் (மயிலாடுதுறை), ப.வேலுச்சாமி (திண்டுக்கல்), சா.ஞானதிரவியம் (திருநெல்வேலி) ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோல், எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), எஸ்.செந்தில்குமார் (தருமபுரி) ஆகியோருக்கு பதிலாக முன்னாள் எம்.பி.செல்வகணபதி (சேலம்), மலையரசன் (கள்ளக்குறிச்சி), ச. முரசொலி (தஞ்சாவூர்), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), அ. மணி (தருமபுரி) ஆகிய புதிய முகங்கள் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கூட்டணியில் ஐஜேகே இல்லாததால் திமுகவுக்கு கிடைத்த பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், ஈரோட்டில் பிரகாஷ், கோவையில் கணபதி ராஜ்குமார், ஆரணியில் தரணிவேந்தன் ஆகிய புதிய முகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை, கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ராணி  குமார் ஆகிய 3 பெண்களில், தென்காசியில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமார் மட்டும் புதியவர். இப்பட்டியலில் பட்டதாரிகள் 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், முனைவர்கள் 2 பேர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

2 பேர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் கனிமொழி, தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், அருண் நேரு, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் என 6 பேர் திமுக தலைவர்களின் வாரிசுகள் ஆவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x