Last Updated : 14 Feb, 2018 09:36 AM

 

Published : 14 Feb 2018 09:36 AM
Last Updated : 14 Feb 2018 09:36 AM

திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வு

தி

ருக்குறளை ஜி.யு.போப் உள்ளிட்ட பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். உலகில் இதுவரையில் 80 மொழிகளில் திருக்குறள் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.

அதன் செறிவைக் கண்டு உலக அளவில் பலர் அதை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் அமெரிக்க ஹார்வர்டு மாணவர் ஜேசன் ஸ்மித். இவர் தற்போது புதுச்சேரியில் தங்கியிருந்து திருக்குறளை மொழிபெயர்ப்பதுடன், ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ள திருக்குறள் நூல் படிகளை அவர் எடுத்துள்ளார்.

இதனாலேயே இவரை ‘திருக்குறள் ஜேசனார்’ என்று செல்லமாய் அழைக்கிறார்கள் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில். தனது ஆய்வு தொடர்பாக ஜேசன் ஸ்மித் கூறியது:

தமிழில் புகழ்மிக்க திருக்குறளின் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி தமிழகம் வந்தேன். அனைவருக்கும் புரியும்படியாக இன்னும் எளிமையாக்கி திருக்குறளின் உரையை ஆங்கிலேயர்களுக்கு கொண்டு செல்வதே எனது விருப்பம். திருக்குறளின் பொருளை ஆங்கிலேயர்கள் எளிதில் புரிந்து கொள்ள இவ்வுரை உதவும்.

திருக்குறள் உரையை செம்மையான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சித்துள்ளேன். இது மிகப்பெரிய பணி; ஆனாலும் அதன் மீதுள்ள ஆர்வம் அதை செய்து முடிக்க வைக்கும்.

தமிழில் இடைக்கால புலவர்களின் நூல்களையும் ஆராய்ந்து வருகிறேன். திருக்குறளுக்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த வரவேற்பையும் ஆராய்கிறேன். எனக்கு பல குறள்கள் பிடித்தாலும் "அகர முதல" குறளே அதிக சிறப்பு மிக்கது என்கிறார் இந்த திருக்குறள் ஜேசனார்.

ஜேசன் ஸ்மித் ஆராய்ச்சிக்கு உதவி வரும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பயிற்சியாளர் பிரகாஷ் கூறும்போது, “அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் மதுரையில் உள்ள இந்திய படிப்புகளுக்கான அமெரிக்க நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு வருகின்றனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன் ஜேசன் வந்தார். தனது விருப்பத்தை தெரிவித்தார். அன்றிலிருந்து திருக்குறள் குறித்து விளக்கங்களை அளித்து வருகிறேன். மணக்குடவர், பரிமேலழகர் ஆகியோரின் உரையை ஜேசன் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மொழிபெயர்ப்பு சரிதானா என்பதை தற்போது சரிபார்த்து வருகிறோம். தனது உரை பற்றி மேலும் சிலருடன் விவாதித்து இறுதி செய்து வருகிறார். விரைவில் அவரது அரிய பணி முடிவடையும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x