Published : 06 Feb 2018 08:27 AM
Last Updated : 06 Feb 2018 08:27 AM

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் நிறைவு நாளில் பல ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன: ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது. நிறைவு நாளான நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. அவற்றை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்குகிறது.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான மானியத் தொகை சமீபத்தில் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1 லட்சம் பெண்களுக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்பிக்கும் பெண்கள், வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று முதலில் கூறப்பட்டது. பழகுநர் உரிமம் இருந்தால் போதும் என்று பின்னர் கட்டுப்பாடு தளர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் பழகுநர் உரிமம் பெற ஏதுவாக, கடந்த சனிக்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டன.

இந்நிலையில், விண்ணப்ப விநியோகம் மற்றும் அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் அதிக அளவில் பெண்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, நேற்று ஒரே நாளில் மட்டும் 16,773-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தமாக 22,960 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை மகளிர் ஆணையம் இன்று தெரிவிக்கும். விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 10-ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர், பயனாளிகளைத் தேர்வு செய்வார்கள். வாகனம் வழங்கும் பணி பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x