Published : 19 Mar 2024 01:06 PM
Last Updated : 19 Mar 2024 01:06 PM

விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு: சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

திருமாவளவன் | ரவிக்குமார்

சென்னை: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ரவிக்குமார் இரண்டாவது முறையாக விழுப்புரத்தில் போட்டியிடுகிறார். நான் ஆறாவது முறையாக சிதம்பரத்தில் போட்டியிடுகிறேன். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு கட்டப்பயணம் இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான பயணம். இதனை நாட்டு மக்கள் உணர தொடங்கி இருக்கிறார்கள்.

10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜக நாட்டின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து பேசினார்களே தவிர, கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காண இயலவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பாக அதானி, அம்பானி போன்றவர்கள் உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்திய மக்கள் இதை நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். எல்லா துறைகளும் மிக பலவீனம் ஆகியிருக்கிறது. பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மிக கேவலமான முறையில் வீழ்ந்து கிடக்கிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, விவசாயிகள் வஞ்சிக்கப்பட்ட நிலை, தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்ட நிலை, ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள் நலிவடைந்து இருக்கின்றன. ஆனால் அதானி, அம்பானி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சாதிய மதவாத அரசியலை நாளுக்கு நாள் தீவிரப் படுத்துகிறார்கள்.

மக்களை சாதியின் பெயராலும். மதத்தின் பெயராலும் பாகுபடுத்தி பிளவுபடுத்தி அதை மேலும் நிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதை பெரும்பான்மை மக்களாக இருக்கிற இந்து மக்களே உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ்கிறது. இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் மக்களுக்கு அது முக்கிய தேவையாக இல்லை.

பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கை. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, குறிப்பாக நாட்டையும் மக்களையும் பாதுகாக்க மக்கள் ஒருபுறமும், சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

இந்த யுத்தம் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. சங்பரிவார் கூட்டத்துக்கும் மக்களுக்குமானது. ஆனால் பாஜக தில்லுமுல்லு செய்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்பது மக்களால் உணரப்படுகிறது. மக்கள் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக இரண்டாவது மிகப்பெரிய சக்தியாக வரவேண்டும் என பல சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பெரியார், வள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயற்சிக்கிறார்கள். வள்ளலாரை சாயம் பூசி தங்களுக்கானவர் என உயர்த்திப் பிடிக்கப் பார்க்கிறார்கள். இவை எல்லாம் அறியாமையில் செய்கிற ஒன்றல்ல, திட்டமிட்டு செய்கிற முயற்சி.

திமுகவுக்கும் அதிமுகவும் தேர்தல் போட்டிகள் தேர்வுகள், முரண்பாடுகள் உண்டு. ஆனால் சமூக நீதி என்ற புள்ளியில் அவர்கள் ஒரே பார்வை கொண்டவர்கள் தான். தமிழகத்தில் அதிமுக திமுக தலைமையிலான கூட்டணியில், தனித்தனியாக தேர்தலை சந்தித்தாலும் கூட அத்தனை கட்சிகளும் சமூக நீதி என்று வருகிறபோது ஒருங்கிணைந்து நின்று இருக்கிறோம் என்பதுதான் வரலாறு.

ஆனால் பாரதிய ஜனதா, சங்பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டுக்குள்ளே வெறுப்பு அரசியலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருவது ஆபத்தானது. அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக மக்கள் செயல்பட வேண்டும். இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்றாலும் கூட, 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள்தான் என களமிறங்குவோம். சாதி, மத உணர்வில் பாஜகவும், பாமகவும் திளைத்துக் கிடக்கிறார்கள். ஒரே கூட்டணியாக இருந்தவர்கள் பாமக, பாஜக, அதிமுகவினர் சிதறி போனார்கள். அதில் அதிமுக மற்றும் பாமக மட்டுமே வாக்கு வங்கிகள் உள்ள கட்சி. பாமக ஒன்று, பாஜக பூஜ்ஜியம் இரண்டும் சேர்ந்தாலும் மதிப்பு ஒன்று மட்டுமே. திமுக தான் இங்கே வலுவாகவும் கூட்டணி கட்சியாகவும் இருக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x