Published : 18 Mar 2024 05:02 PM
Last Updated : 18 Mar 2024 05:02 PM

திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

செல்வராஜ், சுப்புராயன்

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது பொய் பேசுகிறார். சென்னை, தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்தபோது பிரதமர் மோடி வரவில்லை. மேலும், இன்று வரை நிவாரண நிதி ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. ஆனால், பொதுக்கூட்டங்களில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு நிதி அளிக்கவில்லை என்று பொய் கூறுகிறார்.

மொழியை பற்றி பிரமாதமாக பேசுகிறார். ஆனால், தமிழ் மொழிக்கு அளிக்கப்படும் நிதி என்பது மிகக்குறைவு. தமிழக மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிவில் அது தெரியும். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை தீர்மானிக்கவில்லை, பிரதமர் மோடியே தீர்மானிக்கிறார். மோடி உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அமலாக்கத் துறை போன்றவற்றை கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று தெரிவித்தார்.

வை.செல்வராஜ்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ் (வயது 62), மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ. - எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் போதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றினார்.

பின்னர் 1980-ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்தி கொண்டார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12ஆண்டு காலம் பொறுப்பிலிருந்து சிறப்பாக செயல்பட்டார். மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார்.

அப்போது விவசாயிகளின் பிரச்சினையில் தீவிர கவனம் மேற்கொண்டார். மூணாறு தலைப்பு வெண்ணாறு பிரிவிலிருந்து பொன்னிரை வரை சுமார் 50 கீ.மீட்டர் அனைத்து அரசியல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி சிரமதான பணியில் ஈடுபடுத்தி தூர்வாரும் பணியை மேற்கொண்டார். அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற பஞ்யத்து ராஜ் மாநாட்டில் குடியரசு தலைவர், பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரபகிர்வு சம்மந்தமாக பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டவர். தற்போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இதில் மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகிறார். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் செயலாற்றல் மிக்க எளிய தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர், சாதாரண, ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமைக்காக அனுதினம் களத்தில் நின்று போராடும் களப்போராளி, எளிய மக்களின் நம்பிக்கையை பெற்ற பெருமைமிக்க தொண்டர், தோழர், தலைவர். தற்போது நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கே.சுப்பராயன்: நடைபெறவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வேட்பாளராக கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். கடந்த 10.08.1947-ல் பிறந்த இவர், கட்சியின் முழுநேர ஊழியர்.1976-ம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானர். திருப்பூரில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிற இவர் பனியன் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்திலும் ஏஐடியூசி அமைப்பின் பல தொழிற்சங்கங்களுக்கும் பொறுப்பு வகித்தவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர், கோவை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர், மாநில துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.அதே போல் ஏஐடியூசி தொழிற்சங்க அமைப்பில் தமிழ்நாடு மாநில தலைவர், தேசிய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.

1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை, மற்றும் 1996 முதல் 2001 வரை ஒன்றுபட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். 2004 முதல் 2009 வரை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். தற்போது 2019 முதல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x