“பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் ஆளுநர் அதிகார வரம்பை மீறுகிறார்” - மார்க்சிஸ்ட் சாடல்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நடவடிக்கைகள் ஆகும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான க.பொன்முடியை மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாதபோது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை ஆகும். ஆனால், தொடர்ச்சியாக தமிழக அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதே ஆளுநரின் செயலாக இருக்கிறது.

பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நடவடிக்கைகள் ஆகும்.

பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில்தான், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. மேலும், ஒருவர் குற்றவாளி என்று இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதிதான்" என்கிற சட்டவிதிகளின் அடிப்படையில் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, தமிழக ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in