பொன்முடி பதவியேற்பு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதுடெல்லி: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து திமுக எம்பி வில்சன், "ஆளுநர் ஆர்என் ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக இருந்து வருகிறார்." என்று தெரிவித்தார்.
இந்தநிலையில்தான், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், "தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார்.
முதல்வர் பரிந்துரைந்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தவறானது. சட்டத்துக்கு புறம்பானது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதை செயல்படுத்த மறுக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அவசர வழக்காக நாளையே விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
