Published : 18 Mar 2024 11:17 AM
Last Updated : 18 Mar 2024 11:17 AM

போதைப் பொருள் | திமுக அலட்சியத்துக்கு மக்கள் எதிர்வினை ஆற்றுவார்கள்: டிடிவி தினகரன்

தினகரன் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பான புகார்களில் திமுக அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று (திங்கள்கிழமை) அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னை ஆவடி அருகே மாநகர அரசுப் பேருந்து மத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த பத்து நாட்களில் மட்டும் கடலூர், திருப்பூர், நாமக்கல், திண்டிவனம் என தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் போதை மாத்திரைகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள், அதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக காவல் துறையின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக சிதைக்கும் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளின் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பான புகார்களில் திமுக அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள்.” என தினகரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x