Published : 18 Mar 2024 10:20 AM
Last Updated : 18 Mar 2024 10:20 AM

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: திமுக எம்.பி. வில்சன்

திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன்

சென்னை: “ஆளுநர் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்க தமிழ்நாடு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்க அவர் அப்பட்டமாக மறுத்தது சட்டமீறலும் அரசியலமைப்புப் பிரிவு 164(1)-க்கு எதிரானதும் ஆகும்.” என்று திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யும், கட்சியின் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பளிக்காத ஆளுநர் ரவியை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், ‘பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் வில்சன் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக வில்சன் இன்று (திங்கள்கிழமை) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக இருந்து வருகிறார்.

பொன்முடி 19.12.2023 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால், 11.03.2024 அன்று உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தது. அவ்வாறு தீர்ப்பை மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தபோது, அமைச்சர் பொறுப்பை வகிக்கவோ, சட்டமன்ற உறுப்பினராகத் தொடரவோ இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இடைக்கால உத்தரவு விதிப்பதாகவும், இல்லையென்றால் அது சரிசெய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால உத்தரவு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 13.03.2024 என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் 19.12.2023 தேதியிலான அவரது பதவிநீக்கம் செல்லாது என்று அறிவித்தார். மேலும், 16.03.2024 அன்று திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி (எண்.76) காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையையும் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

எனவே அரசியலமைப்பின்பாற்பட்ட அனைத்து நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டுள்ளன. பொன்முடி வழக்கின் தீர்ப்பும் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் 13.03.2024 அன்று, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர் கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இவையனைத்தையும் மீறி, ஆளுநர் ரவி, " உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை நிறுத்தித்தான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை" என உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குத் தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது ஓர் அபத்தமான பொருள்கோடல் என்பதோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலுமாகும். அரசியல் சட்டப்பிரிவு 142 மற்றும் 144-இன்படி ஆளுநர் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். மேலும், பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்க தமிழ்நாடு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்க அவர் அப்பட்டமாக மறுத்தது சட்டமீறலும் அரசியலமைப்புப் பிரிவு 164(1)-க்கு எதிரானதும் ஆகும்.

எம்எல்ஏ பதவிநீக்கம் செய்யப்படக் கூடாது என்பதற்காகவே உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநரின் செயல் ஐயத்திற்கிடமின்றி, நீதிமன்ற அவமதிப்பே ஆகும்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தத் தண்டனை சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்கதல்ல. இச்சூழலில், ஆளுநரின் பொருள்கோடலைச் சட்ட அறியாமையாக மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற அவமதிப்பாகவும் கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும்.

ஒருவர் அறநெறிப்படியோ பிற அடிப்படையிலோ அமைச்சராகத் தொடரலாமா வேண்டாமா என்பதை ஆளுநர் முடிவுசெய்ய இயலாது என்பது தற்போது ஐயத்திற்கே இடமின்றி நிறுவப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்க முதலமைச்சரின் விருப்புரிமைக்குட்பட்டது. அமைச்சராக நியமிக்கப்படுபவரின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வியெழுப்ப முடியாது என்பதைப் பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கி விட்டது.

தமிழ்நாடு பாஜக.வின் அறிவிக்கப்படாத தலைவராகவே ஆளுநர் செயல்பட்டு வருவதாலும், ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காகச் செயல்படுவதே அவரது இயல்பாகிவிட்டதாலும் அரசுடன் அவர் கடைப்பிடிக்கும் மோதல்போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை. ஆனால் அவரது தற்போதைய செயலால் அவர் தாம் வகிக்கும் அரசியலமைப்புப் பொறுப்புக்குத் தகாத, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலைப் புரிந்துள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் பாஜக.வினால் ஒருநாளும் கால்பதிக்க முடியாதென்பதால், ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த அவர் முயல்கிறார்.

அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பளிக்காத இந்த ஆளுநர் உடனே பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் பதவிக்கே இழுக்கான ரவியை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். எப்போது அவர் வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி நடக்கவும், அரசியலமைப்பு முறைகளைக் களங்கப்படுத்தவும், சட்டத்தின் விதிகளைப் புறக்கணிக்கவும் தலைப்பட்டாரோ அப்போதே அவர் தாம் வகிக்கும் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x