Published : 01 Feb 2018 07:48 am

Updated : 01 Feb 2018 07:48 am

 

Published : 01 Feb 2018 07:48 AM
Last Updated : 01 Feb 2018 07:48 AM

நாளை முதல் சுற்றுப்பயணம் தொடக்கம்; அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்பேன் - டிடிவி தினகரன் தகவல்

‘தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்’ என்ற முழக்கத்துடன் பிப்.2-ம் தேதி (நாளை) முதல் தொடங்கும் மக்கள் சந்திப்பு பயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்பேன் என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஆதரவாளர்கள், தமிழக மக்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திராவிட இயக்கமும், அதன் மகத்தான தலைவர்களும் நிலைநாட்டி காட்டிய தமிழகத்தின் சிறப்புக்கும், மாண்புக்கும், தமிழர்களின் வாழ்வுக்கும், உரிமைகளுக்கும் பேராபத்து தலைதூக்கியுள்ளது. இந்தச் சூழலில் அதை முறியடித்து, தமிழகத்தையும், மக்கள் வாழ்வையும் பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு போராட வேண்டிய கட்டாயமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசு திட்டங்கள் எல்லாம், அவரது மறைவுக்குப் பிறகு வரிசையாக தமிழகத்துக்குள் அணிவகுத்து வருகின்றன. அதற்கு தமிழகத்தின் கதவுகளை ஆட்சியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர். ‘நீட்’ தேர்வு என்ற அநீதி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்புச் சட்டம், நியாய விலைக் கடைகளின் மூடுவிழாவுக்கு நாள் குறித்துக் கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி உரிமை காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.

வளமிக்க டெல்டா மாவட்டத்தை கருகச் செய்து பாலைவனமாக்க முயலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை அடியோடு அழிக்க நியூட்ரினோ திட்டம், டெங்கு தமிழகத்தைத் தாக்கியபோது உரிய விழிப்புணர்வையும், மருத்துவ சிகிச்சையும் வழங்காமல் அலட்சியம் செய்தது என எண்ணற்ற துன்பத்தையும், அநியாயத்தையும் மக்களுக்கு இந்த அரசு இழைத்தது.

அதன்பிறகும் குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் இருக்கும் ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சுயலாபத்துக்காக மத்திய அரசுக்கு அடிபணிந்து அடிமைப் பாதையில் தமிழகத்தை இழுத்துச் செல்லும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகரம், நகரம், பேரூர், கிராமம் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறேன்.

‘தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்’ என்ற முழக்கத்துடன் சசிகலா வழிகாட்டுதலுடன் பிப்.2-ம் தேதி தொடங்கும் இந்தப் பயணத்தின்போது தொழிலாளர்கள், மீனவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்கவுள்ளேன்.

இவ்வாறு கடிதத்தில் தினகரன் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author