Published : 06 Feb 2018 05:02 PM
Last Updated : 06 Feb 2018 05:02 PM

பேருந்து மாதாந்திர பாஸ், தினசரி பாஸ் விலையை உயர்த்தியது அரசு

பேருந்து கட்டண உயர்வை அடுத்து தொழிலாளிகள், தனியார் ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தும் மாதாந்திர, தினசரி பாஸ் விலையையும் போக்குவரத்து கழகம் உயர்த்தியுள்ளது.

மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000-லிருந்து ரூ.1300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு சென்னையில் வரும் 8-ம் தேதி முதலே நடைமுறைக்கு வர உள்ளது.

கடந்த மாதம் தமிழகம் முழுதும் போக்குவரத்து பேருந்து கட்டணங்களை அதிரடியாக 67 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியது. இதனால் சாதாரண அடித்தட்டு, உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தினசரி வருமானத்தில் 30 சதவீதத்தை போக்குவரத்துக்கே செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைக் கடுமையாக அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. போராட்டம் தீவிரமானதை அடுத்து சில ரூபாய் அளவுக்கு விலையை குறைப்பதாக அரசு அறிவித்தது.

ஆனாலுல் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று அறிவித்தது. போக்குவரத்து கட்டண உயர்வை முழுதும் குறைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்தன. இன்று அனைத்துக்கட்சிக்கூட்டமும் அறிவாலயத்தில் நடந்தது.

இந்நிலையில் அரசு அறிவித்ததிலிருந்து பின் வாங்கி, தற்போது மாதாந்திர பாஸ் கட்டணம் மற்றும் தினசரி பாஸ் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. முன்னர் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் ரூ.50 இல் இருந்து தற்போது ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள், தினசரி பேருந்தை பயன்படுத்தும் கூலி வேலை செய்வோருக்கு பெரிதும் உபயோகமாக இருந்த மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000-லிருந்து ரூ.1300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு சென்னையில் வரும் 8-ம் தேதி முதலே நடைமுறைக்கு வர உள்ளது.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரும் உத்தேசம் இல்லை, தினசரி பாஸ் கட்டணத்தை மட்டும் மாற்றும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைக்கு மாற்றம் இல்லை என்றாலும் விரைவில் விலை உயர்வு இருக்கும் என தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x