Published : 16 Mar 2024 06:56 PM
Last Updated : 16 Mar 2024 06:56 PM

“தமிழக தேர்தல் களம் இம்முறை பாஜகவுக்கு சாதகமாக உள்ளது” - அண்ணாமலை

சென்னை: "இந்த முறை தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. சவால் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளது. மனு தாக்கல் இவற்றையெல்லாம் கழித்து பார்த்தால் பிரச்சாரத்துக்கு 18 நாட்கள்தான் இருக்கிறது. எல்லா கட்சிக்கும் சமமான நாட்கள்தான் இது. இந்தத் தேர்தல் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் சவாலான ஒன்று.

தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் முதல் அல்லது இரண்டாம் கட்டங்களில் தேர்தல் நடந்துவிடும். எனவே, நாட்கள் குறைவு என்பதை விட அனைவருக்கும் இது சமம் என்று பார்க்க வேண்டும்.

பிரதமர் மோடியின் வருகையால் தமிழகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து கோவை, சேலத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். இது இன்னும் அதிக உற்சாகத்தை எங்களுக்கு தரும்.

39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்யும்போது விளவங்கோடு தொகுதிக்கும் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீக்கிரம் கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 39 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். கூட்டணி கட்சிகளைவிட்டு தனியாக தொகுதிகளை அறிவிப்பது மரியாதையாக இருக்காது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்தல் செலவுகள் அதிகம் இருப்பதில் வருத்தம். சுயேட்சைகள் தமிழகத்தில் ஜெயிக்கவே முடியாது என்னும் அளவுக்கு இங்கு தேர்தல் செலவுகள் அதிகமாக உள்ளது. இம்முறை தமிழகத்தில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

அப்படி செய்தால் மகிழ்ச்சி. ஒவ்வொரு தேர்தலுமே ஜனநாயகத்துக்கு வைக்கக்கூடிய பரீட்சை. தமிழகத்தில் மிகவேகமாக தேர்தல் நடத்தப்படுவது ஒருவகையில் தேர்தல் செலவுகளை கட்டுப்படுவதில் சாதகமான அம்சம்தான்.

இந்தமுறை தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. சவால் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போது ஆட்சியில் இருந்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், இன்று எதுவுமே தெரியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மீனவர்கள் சிறைவாசம் அனுபவித்ததைவிட பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் குறைவான நாட்களே சிறையில் உள்ளனர். மிக விரைவாக மீனவர்கள் மீட்கப்படுகின்றனர்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x