“விஞ்ஞான முறையில் பாஜக ஊழல்” - நாராயணசாமி குற்றச்சாட்டு @ தேர்தல் பத்திரம்

“விஞ்ஞான முறையில் பாஜக ஊழல்” - நாராயணசாமி குற்றச்சாட்டு @ தேர்தல் பத்திரம்

Published on

புதுச்சேரி: “ஊழலேயே செய்யாத கட்சி என கூறிக்கொள்ளும் பாஜக, தேர்தல் பத்திரம் விவகாரத்தில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளது” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டிய விவரம் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரூ.6 ஆயிரம் கோடி பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது. ஊழலே செய்யாத கட்சி என கூறிக்கொள்ளும் பாஜக விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளனர்.

லாட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ரூ.1,300 கோடி வரை நன்கொடை பத்திரத்தை பாஜகவுக்கு அளித்துள்ளனர். அமலாக்கத் துறை சோதனை செய்த 3 நாட்களில் இந்த தொகை பாஜகவுக்கு சென்றிருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒப்பந்தங்களை எடுக்கும் நிறுவனம் ரூ.1,100 கோடி நன்கொடை அளித்துள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி பாஜக நன்கொடை பத்திரம் பெற்றிருக்கிறது.

இது நரேந்திர மோடி அரசின் இமாலய ஊழல். இதனை உச்ச நீதிமன்றம் இப்போது வெளியே கொண்டு வந்திருக்கிறது. இதிலிருந்து மிக தெள்ளத் தெளிவாக நரேந்திர மோடி அரசு ஊழலில் திளைத்த அரசு என்பது தெரிகிறது. இந்த பணத்தை வைத்து தேர்தலுக்காகவும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கும், மாற்று ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கவும் பாஜக பயன்படுத்தியிருக்கிறது. இது சம்மந்தமாக முழுமையான விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

பாஜகவின் 9 ஆண்டு ஆட்சியில் ஒரே ஒரு ரயில் திட்டத்தைக்கூட புதுச்சேரிக்கு கொண்டுவரவில்லை. தற்போது நீட்டிக்கப்பட்ட ரயில் திட்டங்களும் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதிய திட்டங்கள்தான்.

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து வந்தே பாரத் ரயிலை புதுச்சேரிக்கு அளிக்க வேண்டும் என கோரினோம். ஆனால் மத்திய அரசு வந்தே பாரத் ரயிலை புதுச்சேரிக்கு வழங்கவில்லை. பிரதமர் காணொலி மூலம் கலந்துகொண்ட ரயில்வே விழாவில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? ஆளுநருக்கும், முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. ஏன் பிரதமர் விழாவை புறக்கணித்தார் என முதல்வர் விளக்க வேண்டும்.

சிறுமி படுகொலை வழக்கில் முறையான விசாரணையை அரசு நடத்தவில்லை. கஞ்சா எங்கிருந்து வருகிறது? யார் மூலம் வருகிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். கஞ்சா விவகாரத்தில் பல மாநிலங்களுக்கு தொடர்பு உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன், மக்களவை தேர்தலில் போட்டியிட பண பேரம் நடப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மக்களவை சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். எம்எல்ஏவாக போட்டியிடவும் பண பேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருகிறார். இதுவரை 17 முறை சிங்கப்பூர், 13 முறை மலேசியா, 11 முறை துபாய் சென்றுள்ளார். அவர் சென்று வருவதில் மர்மம் உள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரியில் இருந்து வெளிநாடுகளுக்கு இரிடியம் கடத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கிடைக்கிறது. அதோடு பணத்தை பதுக்கவும் வெளிநாடு செல்வதாக தெரிகிறது. இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் அதை வெளியிடுவோம்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in