Published : 03 Feb 2018 07:53 AM
Last Updated : 03 Feb 2018 07:53 AM

வீட்டு வசதி, நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.176 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்புகள், பாலங்கள் திறப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

வீட்டு வசதித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் சார்பில் ரூ.176 கோடியே 37 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பூங்காக்கள் மற்றும் பாலங்களைத் திறந்து வைத்த முதல்வர் கே.பழனிசாமி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 32 வாகனங்களையும் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெருவில் தரை மற்றும் 7 தளங்களுடன் 10 கட்டிட தொகுப்புகளுடன், ரூ.112 கோடியே 80 லட்சத்தில் 960 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு குடியிருப்பும் 416 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டையார்ப்பேட்டையில் உள்ள சேணியம்மன் கோயில் திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 9 கட்டிட தொகுப்புகளுடன், ஒவ்வொரு குடியிருப்பும் 397 சதுரடி பரப்பில் ரூ.38 கோடியே 39 லட்சம் மதிப்பில் 464 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மதுரை பூங்கா நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 374 சதுரடி பரப்பில் ரூ.5 கோடியே 2 லட்சத்தில் 76 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

அதேபோல், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடியே 65 லட்சம் செலவில் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.13 கோடியே 51 லட்சத்தில் 3 ஆற்றுப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே நேற்று திறந்து வைத்தார்.

மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அலுவலர்களின் கள ஆய்வுப்பணிக்காக ரூ.1 கோடியே 92 லட்சத்தில் வாங்கப்பட்ட 32 புதிய ஜீப்புகளையும் முதல்வர் கே.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொது நூலகத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த அரசுப்பணியாளர்களின் 20 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் ச.கிருஷ்ணன், பிரதீப் யாதவ், ராஜீவ் ரஞ்சன் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x