Published : 14 Mar 2024 12:13 PM
Last Updated : 14 Mar 2024 12:13 PM

போதைப்பொருள் விவகாரம் | இபிஎஸ், அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு

சென்னை: போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மார்ச் 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வரான என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதே விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x