Published : 13 Mar 2024 05:50 AM
Last Updated : 13 Mar 2024 05:50 AM

முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுரை

முதல்முறை வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை அடைவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக அனைத்து பல்கலை. துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநரும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கலந்துரையாடினார்.

சென்னை: முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் மாளிகையில் கடந்த11-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக வலியுறுத்தினார்.

முதல் தலைமுறை வாக்காளர் களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் இந்த முயற்சியை ஓர் இயக்கமாக கருதி, வாக்களிப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள்அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதை உறுதிப்படுத்தவும் உரிய கவனம் செலுத்துவதாக துணைவேந்தர்கள் உறுதியளித்தனர்.

இதற்காக என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் உதவியை நாடுவது குறித்தும், மாணவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க புதிய செயலியை உருவாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களை 100 சதவீதம் வாக்களிக்க வைக்கும் கல்லூரிகள், துறைகளை பாராட்டுவதற்கான திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் துணைவேந்தர்கள், ஆளுநர்மாளிகையில் பாராட்டப்படுவார்கள். வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்க, பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களின் பயன்பாடும், பொழுதுபோக்கு வீடியோ காட்சிகளும் இந்த விழிப்புணர்வு பணிக்கு பெரிதும் வலுசேர்க்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x