Published : 12 Mar 2024 11:02 AM
Last Updated : 12 Mar 2024 11:02 AM

பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரம்: ஓபிஎஸ், சரத்குமார் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்.

தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிகட்சிகளுடன் பாஜக நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை பாஜக குழுவிடம் கூட்டணி கட்சியினர் அளித்தனர்.

பாஜக கூட்டணியில் தமாகா, சமத்துவ மக்கள்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனுடன் நேற்று பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில், தொகுதி பங்கீடு செய்ய பாஜக தேசிய பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர்களுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

மத்திய இணை அமைச்சர்எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் தனதுஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோருடன் வந்து, வி.கே.சிங், கிஷன் ரெட்டி, அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, ‘முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்பது குறித்து பாஜக குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக பாஜக குழு கூறியிருக்கிறது’ என்றார்.

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனை பாஜக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால்,அவர் திருச்சியில் இருந்ததால், அவரை மாநிலதலைவர் அண்ணாமலை, கிஷன் ரெட்டி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசினர்.

சமக தலைவர் சரத்குமார்,
அண்ணாமலையை சந்தித்து
ஆலோசனை நடத்தினார்.
படங்கள்: ம.பிரபு

இந்நிலையில், கூட்டணிக் கட்சி தலைவர்களான சரத்குமார், ஜான் பாண்டியன்,தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் கமலாலயம் வந்து பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் நேற்று மதியம் தமாகாதலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டணி கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர்களின் விவரங்களை பாஜகவிடம் அளித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு செய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கமலாலயத்தில் மாநில தலைவர்அண்ணாமலை தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை அண்ணாமலை டெல்லி தேசிய தலைமையிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், இதற்காக, அவர் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜலட்சுமி, அண்ணாமலை, வி.கே.சிங், கிஷன் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். சிவகங்கை மாவட்டம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளரும் தொழிலதிபருமான என்.ராமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x