Published : 25 Feb 2018 09:57 AM
Last Updated : 25 Feb 2018 09:57 AM

அரிய தமிழ் நூல்களை மின்னூல்களாக்க நடவடிக்கை: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

அரிய தமிழ் நூல்களை மின்னூல்களாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா தரமணியில் உள்ள அந்நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்று, பழமையான 70 அரிய வகை நூல்களை வெளியிட, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வணிவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அந்நிறு வன வளாகத்தில் 70 மூலிகைச் செடிகள் நடப்பட்டன. பின்னர் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிறுவனத்தில் 70 நாட்கள் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் முக்கிய நிகழ்வாக 1834-ம் ஆண்டு முதல், 1935-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 70 அரிய நூல்கள் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ் ஆய்வுக்கு பயன்படக்கூடிய நூல்களாகும். இவற்றை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மின்னூல்களாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல அறிஞர்களின் படைப்புகளை அரசுடைமையாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இந்த ஆண்டு 5 அறிஞர்களின் படைப்புகளை அரசுடைமையாக்குவது தொடர்பாக விரைவில் முதல்வர் அறிவிப்பார். கொல்கத்தாவில் தொடங்கிய புத்தக கண்காட்சி கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமே வேரூன்றியுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் பிரபலம் அடையவில்லை.

முதலிடத்தில் தமிழகம்

சென்னை புத்தக கண்காட்சியில் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்த கண்காட்சியில் விற்பனையை ரூ.50 கோடியாக உயர்த்துவதற்கான உத்திகளை வகுத்துக்கொண்டு இருக்கின்றனர். அதிக அளவில் புத்தகங்கள் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 10 ஆயிரம் நூல்கள் வெளிவருகின்றன. அதில் 10 சதவீதம் மட்டுமே ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகின்றன. பொதுமக்கள் மத்தியில் சில நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அந்த நூல்களை மறு பதிப்பு செய்து, மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் கட்டமைப்பு நம்மிடத்தில் இல்லை. அந்த கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்புகள் வரும்.

தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் தமிழ், கலை, பண்பாடு, பதிப்பு என 22 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பதிப்புத் துறையை தனி நிறுவனமாக்கி, அதற்கு ஓர் இயக்குநரை நியமிக்க திட்டமிட்டிருக்கிறோம். தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் அதிக அளவில் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

அவற்றை சந்தைப்படுத்தும் பணிகளை பதிப்புத்துறை மேற்கொள்ளும் என்றார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், தென் சென்னை எம்பி ஜெ.ஜெயவர்த்தன் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x