Published : 09 Mar 2024 11:04 PM
Last Updated : 09 Mar 2024 11:04 PM

இந்தியா விண்வெளியில் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளது: இஸ்ரோ தலைவர் சோமநாத் பெருமிதம்

திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் எம்.சோமநாத்.

திண்டுக்கல்: இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி இன்று சந்திராயன் வரை மிகப்பெரிய அளவில் விண்வெளியில் சாதித்துள்ளது. இது 60 ஆண்டு கால தொடர் பயணத்தின் வளர்ச்சி, என இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசினார்.

திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையின் 37வது பட்டமளிப்பு விழா இன்று (மார்ச் 09) மாலை பல்கலை. அரங்கில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலை. வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர் (பொறுப்பு) வி.காமகோடி வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) எல்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பட்டம் பெறும் மாணவர்களை அந்தந்த துறைத்தலைவர்கள் அறிமுகப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “பெரிய பயணத்துக்கிடையே பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பட்டம் பெற்றதற்கு உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

காந்திகிராம பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு பலரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். சமூக சேவைகளுக்கும் மாணவர்களை இந்த நிறுவனம் தயார் செய்கிறது. சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல், உயர்ந்த இலக்கை அடைய ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி இன்று சந்திராயன் வரை மிகப்பெரிய அளவில் விண்வெளியில் சாதித்துள்ளது. இது 60 ஆண்டு கால தொடர் பயணத்தின் வளர்ச்சி. நாம் இப்போது நிலவின் தென்துருவத்தில் சாதனை படைத்துள்ளோம்.

நாட்டிற்காக விண்வெளி ஆராய்ச்சி மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பணிபுரிந்து வருகிறோம். சந்திராயன் 2 ல் ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில்தான், தவறை சரிசெய்து அடுத்ததாக வெற்றிபெற்றோம். நிலவு என்பது பூமியில் இருந்து வேறுபட்டது. அதன் தகவமைப்பை புரிந்து கொண்டு செயல்பட்டதால் வெற்றி கிடைத்தது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியையும் தாண்டி சமூகத்திற்கும் பயன்பட்டுவருகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சி, வங்கிப்பணியில் ஏ.டி.எம்., செயல்பாடு, விவசாயிகளுக்கான காலநிலையை அறிதல், புயல்களை அறிதல், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்தும் சாட்டிலைட்கள் மூலம் அறிந்து மக்களுக்கு பயன்பட்டுவருகிறது.

புது தொழில்நுட்பம் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவு, செவ்வாய் போன்றவைகளுக்கு மனிதர்கள் பயணம் செய்ய உள்ளனர். நாம் இதில் முதல் அடியை எடுத்துவைத்துள்ளோம். இதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டுவருகிறது. பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உள்ளது. இதை மூன்றாவது பொருளாதார நாடாக மாற்ற முயற்சிமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நாட்டின் அனைத்து துறைகளும் உழைக்கவேண்டும். நல்ல வாய்ப்புக்களை நீங்கள் கண்டறியவேண்டும். எதிர்காலம் தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது. விவசாயத்தில் கூட தொழில்நுட்பம் வந்துவிட்டது.

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும். பட்டம் பெற்றவர்கள் அந்தந்த களங்களில் நமது தேசத்தின் வெற்றிக்கு பங்களிக்கவேண்டும். பட்டம் பெற்றது உங்கள் பயணத்தின் ஆரம்பம் தான். எதிர்காலத்தில் சாதிக்கவேண்டியது நிறைய உள்ளது” என்று சோமநாத் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x