Published : 08 Mar 2024 03:50 PM
Last Updated : 08 Mar 2024 03:50 PM

போதைப் பொருள் பிரச்சினை: திமுக அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: "போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற வகையில், அதிமுக சார்பில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், மார்ச் 12-ம் தேதி, காலை 10 மணியளவில், மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்ததோடு, பொதுவெளியில் கட்சியின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் என்று போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது. ஆனாலும், திமுக அரசு இவ்விஷயத்தில் அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் அதிகரிப்பால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுடைய வாழ்க்கை பெரிதளவும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால், பெற்றோர்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இந்த போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்காமல் வாய் மூடி, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது திமுக அரசு. ஏற்கெனவே, தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி, அந்தக் குடும்பங்கள் நிற்கதியாய் நிற்கின்றன.

இதுபோன்று போதைப் பொருள்களின் பழக்கத்துக்கு ஆட்பட்டுப்போய் அதிலிருந்து மீள முடியாமல் இளைஞர்களும், அவர்களுடைய குடும்பமும், உற்றார் உறவினர்களும் வேதனையின் விளிம்பில் இருக்கின்றனர்.

சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக், திமுக அரசின் முதல்வர் மற்றும் அவரது மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடனும், முதல்வரின் குடும்பத்தினருடனும் நெருக்கமாய் இருப்பது வெட்கக் கேடு; வேதனையானது.

மேலும், தமிழகக் காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் ஒரு நிகழ்ச்சியில் மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்து, பாராட்டுகின்ற புகைப்படங்களும் வெளியாகி இருப்பதிலிருந்து தமிழகக் காவல் துறை எந்த நிலையில் இருக்கிறது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

எனவே, திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் போதைப் பொருள்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்திலும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற வகையில், அதிமுகவின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், மார்ச் 12ம் தேதி, செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறும்.

இந்த மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திமுக அரசைக் கண்டித்தும், வருங்கால தலைமுறையினரின் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள நிர்வாகத் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x