Last Updated : 07 Mar, 2024 12:55 PM

1  

Published : 07 Mar 2024 12:55 PM
Last Updated : 07 Mar 2024 12:55 PM

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு | முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்

புதுச்சேரி முதல்வருக்கு தமிழிசை கடிதம்

புதுச்சேரி: சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர டிஜிபிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதோடு, முதல்வர் ரங்கசாமிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி ஸ்ரீநிவாஸ், டிஐஜி சின்ஹா, எஸ்எஸ்பி அனிதா ராய், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். துணைநிலை ஆளுநரின் செயலர் அஜித் விஜய் சௌதரி உடன் இருந்தார்.

விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பது குறித்தும், விசாரணையின் நிலவரம் குறித்தும் துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டறிந்தார். விசாரணையை விரைந்து முடிக்கவும் குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரவும் துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை காவல்துறை முடுக்கி விட வேண்டும் என்றும் அறிவுத்தினார்.

இது தொடர்பாக முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய சிறுமி மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது. இந்த வழக்கில் விரைந்தும் விரிவாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சிறுமிக்கு அஞ்சலி செலுத்த நேற்று சென்றிருந்தபோது இந்த வழக்கை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்திருந்தேன்.

மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணை குழுவிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன். ஒரு சிறப்பு தடயவியல் குழுவின் பங்களிப்பும் இந்த விசாரணையை விரைவுபடுத்த துணையாக இருக்கும். புதுச்சேரி காவல்துறை, இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணையை விரைவுப்படுத்தும்.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று பொது மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பினை ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலமாக நிர்வாகத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும் மக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தி சட்டம்-ஒழுங்கு நிலையை நிலை நாட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x