Published : 07 Mar 2024 11:13 AM
Last Updated : 07 Mar 2024 11:13 AM

திமுக கூட்டணி இறுதியாவதில் தாமதம் ஏன்? - காங்., மதிமுக, விசிகவுடன் தொடரும் பேச்சு

காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் கூடுதல் இடம் கேட்டு அடம் பிடித்து வருவதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாகி உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கிய கட்சி திமுக. இந்த முறை கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால், அதற்கு பதில் கமல்ஹாசனின் மநீமவை சேர்க்க முடிவெடுத்துள்ளது. மேலும், 23 இடங்களில் திமுக போட்டியிடவும், 17 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவெடுத்தது.

அதேபோல், போட்டியிடும் தொகுதிகளில் சிலவற்றை மாற்றி பெற்றுக் கொள்ளவும் தீர்மானித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது.

அடுத்த கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 6 மற்றும் புதுச்சேரி, விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு 1 தொகுதிகளை ஒதுக்கும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் ஒன்றை மநீம கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

ஆனால், இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இது தவிர, விசிக தனக்கு கூடுதலாக ஒரு பொதுத்தொகுதியை வழங்குவதுடன், மூன்றிலும் தங்கள்சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றது. மதிமுகவும்தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும், மாநிலங்களவை இடம் தருவதாக இப்போதே உடன்படிக்கை செய்ய வேண்டும் என்றும் அடம்பிடிக்கிறது.

முதல்வர் வருகை ரத்து: இதுபோன்ற காரணங்களால் திமுக கூட்டணி இறுதி வடிவத்துக்கு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதி பங்கீட்டை மார்ச் 7-க்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, மதிமுக, விசிக கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு வரை அக்கட்சிகள் வரவில்லை. வருகையை எதிர்பார்த்து முதல்வர் அறிவாலயம் வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், முதல்வர் வருகையும் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், விசிக அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. குறைந்தபட்சம் கடந்த முறை அளித்த தொகுதியையாவது தரவேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது.

அழைத்தும் வராதது போன்ற சூழல்களால், கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கிய திமுக தரப்போ, ஓரிரு தினங்களில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x