Last Updated : 05 Mar, 2024 06:10 AM

 

Published : 05 Mar 2024 06:10 AM
Last Updated : 05 Mar 2024 06:10 AM

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் அலங்கோலமாக காட்சி அளிக்கும் மயிலாப்பூர் லஸ் கார்னர்

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: மெட்ரோ ரயில் சுரங்கப் பணி காரணமாக, சென்னை மயிலாப்பூரில் லஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தற்போது அலங்கோலமாகக் காட்சி அளிக்கின்றன. பாதசாரிகள் நடந்துசெல்லும் நடைபாதைகளில் கேபிள்ஒயர்கள் அறுந்து சிதறி கிடைக்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர். இவற்றுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒன்றுமாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம்.

இந்த வழித்தடத்தில் ஆர்.கே.சாலை, திருமயிலை, மந்தைவெளி ஆகிய 3 சுரங்க மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட உள்ளதால், மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இங்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சென்னை நகரின் கலாச்சார மையமாக மயிலாப்பூர் திகழ்கிறது. இங்கு ஏராளமான கோயில்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சபாக்கள் உள்ளன. மயிலாப்பூரில் தற்போது மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் காரணமாக, முக்கிய சாலைகளில் சென்ற வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதிலும், லஸ் கார்னரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி காரணமாக, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதன் அருகே இருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதைகளில் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கேபிள் ஒயர்கள் தொங்குகின்றன.

இந்தப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரம் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்துசெல்லும் நிலை உள்ளது. லஸ் கார்னரில் இருந்த பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் நிழற்குடை இல்லாமல் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர்.

(அடுத்த படம்) இப்பகுதியில், மக்கள் பயன்படுத்த முடியாத வகையில்
அலங்கோலமாகக் காட்சியளிக்கும் நடைபாதை. படங்கள்: எஸ்.சத்தியசீலன்

இதுகுறித்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ``மயிலாப்பூரில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இப்பாதையை ஒருவர் தவறவிட்டால், ஒரு கி.மீ. வரை சுற்றி வரவேண்டிய நிலை இருக்கிறது.

அடையாறில் இருந்து மயிலாப்பூருக்கு சுற்றிச் சுற்றி வர வேண்டியுள்ளது. வழக்கமாக 10 நிமிடத்தில் வர வேண்டிய இடத்துக்கு 30 நிமிடம்வரை ஆகிறது. அலுவலக நேரங்களில் ஒருமணி நேரம் வரை ஆகிறது.மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளில் பயணிப்பது சிரமமாக உள்ளது.

மெட்ரோ ரயில் பணி காரணமாக, சேதமடைந்த பாதைகளைச் சீரமைப்பது கிடையாது. கேபிள் ஒயர்கள் சாலை ஓரம் குவிந்து கிடைக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாததால், பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதை வரையறைப்படுத்த வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த ரவி கூறுகையில், ``மயிலாப்பூர் முக்கிய ஆன்மிக தலமாக இருப்பதால், ஏராளமான உள்நாட்டினர், வெளிநாட்டினர் வருகை தருவார்கள். எனவே, இந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``மயிலாப்பூரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி 3 முதல் 4 ஆண்டுகளில் முடிவடையும். மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்குவது இரண்டரை ஆண்டுகள் வரை நீடிக்கும். லஸ் கார்னரில் பாதைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்குபொதுமக்களின் சிரமத்தைத் தீர்க்கநடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x