Published : 04 Mar 2024 09:32 PM
Last Updated : 04 Mar 2024 09:32 PM

வைகை ஆற்றுக் கரை தடுப்புச் சுவர் அவசியமா? - கள்ளழகர் நிகழ்வில் தொடரும் உயிரிழப்புகள்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், வைகை கரை தடுப்பு சுவர் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருபுறமும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சாலை முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் போடாததால் என்ன நோக்கத்திற்காக இந்த சாலை போடப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் சிட்டி நான்கு வழிச் சாலைக்கும், ஆற்றுக்கும் நடுவில் நகர்ப் பகுதியில் 14 அடி உயரத்துக்கு காங்கிரீட்டால் ஆன தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நகர்பகுதியில் பெய்த மழைநீர் தானாவே வடிந்து வைகை ஆற்று வந்து கலக்கும். தற்போது இந்த பிரம்மாண்ட தடுப்பு சுவரால் வைகை ஆற்றுக்கு நகர்பகுதியில் பெய்யும் மழைநீர் வராமல் சாலைகளில் மழைநீர் தெப்பம்போல் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்தச் சுவர் கட்டப்படும்போதே, இதனால் நகர்ப்பகுதியில் நிலத்தடி நீரோட்டம் பாதிக்கப்படும் என்றும், சித்திரை திருவிழாவில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல் மாநகராட்சியும், பொதுப் பணித்துறையும் இணைந்து தடுப்புச் சுவர் கட்டியது. தற்போது எச்சரித்தது போலவே, தடுப்பு சுவர் கட்டியப்பிறகு நடந்த சித்திரைத் திருவிழாக்களில் கடும் நெரிசலும், நீரில் மூழ்கி பக்தர்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், “மதுரை சித்திரை திருவிழாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் அழகர் வைகையில் இறங்கும் வைபவத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்புவரை எந்தவித உயிரிழப்புகளும் நடந்ததில்லை. இதுவரை இல்லாத நிகழ்வாக 2022-ம் ஆண்டு 2 பேரும், 2023-ம் ஆண்டு 4 பேரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நெரிசலுக்கு காரணம் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் கட்டப்பட்டுள்ள உயரமான தடுப்புச் சுவர்தான்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளுக்கு முந்தைய நாள், மதுரை மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள். அவர்கள் வைகை ஆற்றில் முடிக்காணிக்கை செலுத்துவார்கள். மறுநாள் அதிகாலையில் அழகரைக் காணவும், அவர் மீது தண்ணீர் பீச்சியடிக்கவும் வைகை ஆற்றில் இறங்குவார்கள். ஒரு கட்டத்தில் பக்தி பரவசத்தில் அழகரை பார்க்க பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடிக்கும்போது ஆற்றங்கரை முதல் கோரிப்பாளையம் வரை நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த காலத்தில் இதுபோல் நெரிசல் ஏற்படும்போது பக்தர்கள், ஆற்றின் கரைகளில் ஏறி தப்பி செல்வார்கள். தற்போது கரைகளில் தடுப்பு சுவர் கட்டியதால் பக்தர்களால் ஆற்றை விட்டு கடந்து செல்ல முடியாமல் நெரிசல் கோரி்ப்பாளையம் வரை ஏற்படும்போது அதில் சிக்கி சிலர் உயிரிழக்கின்றனர். படுகாயங்களும் அடைகின்றனர். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதி, ஏவி மேம்பாலம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் உள்ளூர் அரசியல் விஐபி-கள், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அவர்கள் குடும்பத்தினர் நின்று விழாவை பார்ப்பார்கள்.

பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கிதான் விழாப்பார்க்க முடிகிறது. ஆற்றைச் சுற்றி கட்டப்பட்டுள்ள உயரமான தடுப்புச்சுவரால் பொதுமக்களால் ஆற்றுக்குள் எளிதில் ஏறவோ, இறங்கவோ முடிவதில்லை. இதனாலே ஒவ்வொரு ஆண்டும் வைகை கரை சாலையில் மூச்சு முட்டும் அளவுக்கு கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், விழாவை காண வரும் அரசியல்வாதிகள், விஐபிகள், காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தினரை பாதுகாப்பதிலே கவனம் செலுத்துகின்றனர். கள்ளழகர் ஆற்றைவிட்டு சென்றதும், கடமை முடிந்துவிட்டதாக கலைந்து சென்றுவிடுகின்றனர்.

கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் சித்திரைத்திரவிழாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க குறைந்தப்பட்சம் பக்தர்கள் அதிகம் கூடும் ஏவி மேம்பாலம் முதல் ஓபுளா படித்துறை பாலம் வரையிலான ஆற்றின் இருகரையிலும் உள்ள தடுப்புச்சுவரின் உயரத்தைக் குறைக்க வேண்டும். உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த தடுப்பு சுவரை அகற்றுவது நிரந்தர நடவடிக்கையாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x