Published : 17 Feb 2018 08:48 AM
Last Updated : 17 Feb 2018 08:48 AM

திருவல்லிக்கேணி டியூசிஎஸ் கூட்டுறவு மருந்து கடையில் மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் விற்பனை தொடக்கம்

திருவல்லிக்கேணியில் இயங்கிவரும் டியூசிஎஸ் கூட்டுறவு மருந்துக் கடையில் மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் மருத்துவச் செலவை குறைக்கும் வகையில் மத்திய அரசு சார்பில், பிரதமர் மலிவு விலை மருந்து திட்டமான ‘ஜன் அவுஷதி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கும் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் நடத்திவரும் மருந்துக் கடையிலும் ஜெனரிக் மருந்துகள் விற்பனை தொடங்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து டியூசிஎஸ் நிறுவன மேலாண் இயக்குநர் ஏ.ஜி.சந்திரசேகர் கூறியதாவது:

டியூசிஎஸ் நிறுவனம் சார்பில் 9 மருந்துக் கடைகள் நடத்தப்படுகின்றன. இதில், திருவல்லிக் கேணியில் உள்ள மருந்துக் கடையில் ஜெனரிக் மருந்துகள் விற்பனையை தொடங்கியுள்ளோம். பிராண்டட் மருந்துகளை நாங்கள் ஏற்கெனவே 15 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறோம்.

தற்போது ஜெனரிக் மருந்துகளை 40 சதவீதம் வரை தள்ளு படி விலையில் விற்கத் தொடங்கி யுள்ளோம்.

பாராசிட்டமால் மருந்தை பிராண்டட் மருந்தாக வாங்கி னால் தள்ளுபடி போக 15 மாத்திரைகள் கொண்ட அட்டை விலை ரூ.47. அதே பாராசிட்டமால் மருந்தை ஜெனரிக் மருந்தாக வாங்கினால் 40 சதவீத தள்ளுபடி போக ரூ.17-க்கு கிடைக்கும். இதனால், சுமார் 60 சதவீதம் விலை குறைகிறது.

நோயை தீர்ப்பதில் இரு மருந்துகளும் ஒரே பணியைத்தான் செய்கின்றன. ஜெனரிக் மருந்து கள் பற்றி மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை.

எங்கள் கடைக்கு வரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்கிறோம். மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். விரைவில் மற்ற கடைகளிலும் ஜெனரிக் மருந்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெனரிக் மருந்து என்றால் என்ன?

ஒரு மருந்து ஒரு வேதிப்பொருள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேதிப்பொருட்களின் கலவையாக இருக்கும். இந்த அடிப்படை வேதிப்பொருள் ஒன்றுதான் என்றாலும், ஒரே மருந்தை வெவ்வேறு நிறுவனங்கள், வெவ்வேறு பெயரில் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. இந்த மருந்துக்கான தயாரிப்பு செலவு, ஆராய்ச்சி, காப்புரிமை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான செலவு, நிறுவனத்துக்கான லாபம் ஆகியவற்றைக் கணக்கிட்டே மருந்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஜெனரிக் மருந்துகள் தயாரிக்கும்போது ஆராய்ச்சி, காப்புரிமை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான செலவுகள் தவிர்க்கப்படுகிறது. இதனால், ஜெனரிக் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x