Published : 04 Feb 2018 10:20 AM
Last Updated : 04 Feb 2018 10:20 AM

பிரபல நிறுவனம் பெயரில் தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போலி கைக்கடிகாரங்கள் பறிமுதல்: சவுகார்பேட்டையில் 4 பேர் கைது

சென்னை, சவுகார்பேட்டை, காசி செட்டி தெருவில் கைக்கடிகாரங்களை மொத்தமாக தயாரித்து விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை நடத்தி வருபவர் ஜனவரம் (45). இவர், தன்னுடைய கடையில் பிரபல தனியார் நிறுவனங்களின் பெயரில் கைக்கடிகாரங்களை விற்று வந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் சம்பந்தப்பட்ட கைக்கடிகார நிறுவனத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

திடீர் சோதனை

அதன்படி, வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் மேற்பார்வையில் யானைக்கவுனி காவல் நிலைய ஆய்வாளர் ஜூலியட் சீசர் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் ஜனவரத்தின் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, பிரபல நிறுவனங்களின் பெயரில், போலி கைக்கடிகாரங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கடிகாரங்களை போலியாக தயாரித்து, அதை குறைந்த விலைக்கு விற்று வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடையில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஜனவரம், கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சரவணன், கணேஷ், ராஜி ஆகிய 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x