Last Updated : 16 Feb, 2018 11:54 AM

 

Published : 16 Feb 2018 11:54 AM
Last Updated : 16 Feb 2018 11:54 AM

காவிரி நீர் குறைக்கப்பட்டது தமிழகத்திற்கு ஏமாற்றம்: விவசாயிகள் வேதனை

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை 14 டிஎம்சி குறைத்து, 177.25 டிஎம்சியாக குறைக்கபட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும், தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து 'தி இந்து தமிழ்' இணையதளத்துக்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவையும் விட குறைவான தண்ணீர் வழங்குவதால் தமிழகத்தில் பாசனப் பகுதிகள் குறையும்.

அதேசமயம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சில வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நதிகளுக்கு எந்த ஒரு தனி மாநிலமும் உரிமையைக் கொண்டாட முடியாது எனக் கூறியுள்ளது. இதன் மூலம் காவிரி மட்டுமின்றி, பாலாறு, முல்லை பெரியாறு உட்பட அனைத்து நதிகளையும் தனிப்பட்ட மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாது. நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அதற்கான முயற்சியை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

இதுபோலவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அந்தந்த மாத அடிப்படையில் தண்ணீர் பகிர்வு நடைபெற வேண்டும். மத்திய அரசு அரசியல் லாப நோக்குடன் செயல்படாமல், இந்த பிரச்சினையில் விவசாயிகளின் நலன் கருதி செயல்பட வேண்டும்’’ எனக்கூறினார்.

இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் மன்னார்குடி ரங்கநாதன் கூறியதாவது:

‘‘காவிரி நதி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஏற்கதக்கது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கயை ஏற்காமல், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x