Published : 08 Feb 2018 09:16 PM
Last Updated : 08 Feb 2018 09:16 PM

3 தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி; தமிழகம் புறக்கணிப்பு: டாக்டர்கள் சங்கம் கண்டனம்

மூன்று நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மத்திய அரசின்  திட்டத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''நாடு முழுவதும் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான இடங்கள் குறித்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தமிழகத்தில் இல்லை. தமிழகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பே, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, அவற்றின் நிதி ஒதுக்கீட்டோடு நடைபெறும் மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் அறிவிப்பை மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவிப்பது, மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் செயலாகும்.

தமிழகம் ஏற்கெனவே,மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வருகிறது. அது போன்று ஒவ்வொரு மாநில அரசும் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் சம அளவில் பிரித்து வழங்க வேண்டும்.

அதை விடுத்து, மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதாக மத்திய அரசே அறிவிப்பதும், ஏற்கெனவே நிறைய மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது என தமிழகத்தை வஞ்சிப்பதும் கண்டனத்திற்குரியது.

நீண்டகாலமாக சொந்த நிதியில், படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிய தமிழகத்தை தண்டிக்கும் வகையிலும், மருத்துவக் கல்லூரிகளையே தொடங்காமல் பொறுப்பற்று இருந்த மாநிலங்களுக்குப் பரிசுகளை வழங்குவது போலவும் மத்திய அரசு செயல்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்  தமிழகத்திற்கான உரிய பங்கை மத்திய அரசு ,மாநில அரசிடம் வழங்கிட வேண்டும். மாநில அரசு இந்நிதியைக் கொண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட வேண்டும்.

மருத்துவக் கல்வியையும்,மருத்துவச் சேவையையும் முற்றிலும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து பறித்து,நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுவது நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டையும்,கூட்டாட்சிக் கோட்பாட்டையும் பாதிக்கும்.

மருத்துவக் கல்வியையும்,மருத்துவச் சேவையையும் முற்றிலும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து பறிக்கும் நோக்கோடுதான் ,நீட் நுழைவுத் தேர்வை புகுத்தியுள்ளது.இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர முயல்கிறது.

'எய்ம்ஸ்' போன்ற மருத்துவ நிறுவனங்களை, மாநிலந்தோறும் இன்னும் மத்திய அரசு தொடங்கவில்லை. அக்கல்லூரிகளில் அவை இடம் பெற்றுள்ள மாநில மாணவர்களுக்கென தனி ஒதுக்கீட்டை வழங்க வில்லை.

இந்நிலையில் , மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றி, அவற்றை தனியாரிடம் தாரை வார்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, மறைமுகத் திட்டத்தோடு மத்திய அரசு செயல்படுவது சரியல்ல. இது மாவட்ட மருத்துவமனைகளை மத்திய அரசு , மாநிலங்களிடமிருந்து அபகரிக்கும் செயலாகும்.

தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் தொடங்கப்படும் என மூன்றாண்டுகளுக்கு முன்பு அறிவித்ததையும் இன்னும் மத்திய அரசு நடைமுறைப் படுத்தவில்லை. இந்நிலையில், தமிழகத்தை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், மத்திய அரசு செயல்படுவது சரியல்ல.

தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட மத்திய அரசு நிதி உதவியை மாநில அரசிடம் வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.''

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x