Published : 28 Feb 2018 08:01 PM
Last Updated : 28 Feb 2018 08:01 PM

தூக்கி உள்ளே போட்டு விடுவேன் - தோழியிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் கைது

ராயப்பேட்டையில் தனது பெண் தோழியிடம் பேசிக்கொண்டிருந்த நபரிடம், 'நான் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ். தூக்கி உள்ளே போட்டு விடுவேன் பணம் கொடு' என்று மிரட்டிய நபரை போலீஸார் பிடித்து கைது செய்தனர்..

சென்னை ராயப்பேட்டை கோபாலபுரம் லாயிட்ஸ் சாலையில் விஜய் என்பவர் தனது பெண் தோழியுடன் தனது காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் கண்ணாடி கதவை டிப்டாப் நபர் ஒருவர் தட்டியுள்ளார். கார் கண்ணாடி கதவை இறக்கிய விஜய் என்ன விபரம் என்று கேட்டுள்ளார்.

'நீ யாரு மேன் காருக்குள் பெண்ணை அமர வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என்று வெளியிலிருந்த நபர் மிரட்டியுள்ளார். அதற்கு காரிலிருந்த விஜய், 'சார் நான் என் தோழியுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இதில் என்ன பிரச்சினை?' என்று கேட்டுள்ளார்.

'எனக்கு என்ன பிரச்சினையா?  நான் யார் தெரியுமா? ஏவிஎஸ் இன்ஸ்பெக்டர் (விபச்சாரத் தடுப்புப் பிரிவு). இந்த ஏரியா விஐபி ஏரியா. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்துள்ளது. உங்களைப்பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது. இருவரும் ஸ்டேஷனுக்கு வாருங்கள்' என்று கூறியுள்ளார்.

'சார். நான் ஒரு தொழிலதிபர் எனது விசிட்டிங் கார்டு இது, இவர் என் தோழி நீங்கள் தேவை இல்லாமல் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று விஜய் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர், 'உங்களது செல்போன்களை கொடுங்க.  உங்களை விசாரிக்கணும்' என்று கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த விஜய் உடனடியாக 100க்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டு அந்த நபரிடம் பேச்சுகொடுத்தபடி இருந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ராயப்பேட்டை போலீஸார் அந்த நபரைப் பிடித்து சார் யார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த நபர் நான் ஏவிஎஸ் இன்ஸ்பெக்டர்.  இந்த ஏரியாவில் பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரின் பேரில் ஸ்பெஷலாக ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று அதிகாரத் தோரணையில் கூறியுள்ளார். ஆனால் போலீஸார் சிறிது நேரம் நடத்திய விசாரணையில் அந்த நபர் போலியான நபர் என்பது தெரிய வந்துள்ளது.

போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெயர் ஜமால் என்பதும் வண்ணாரப்பேட்டையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x