அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்

Published on

சென்னை: அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஜனவரியில், கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்காத, பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கொடுக்காத காரணங்களுக்காக தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தமிழக பாஜகவையும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார் என தகவல் பரவிய நிலையில், கடந்த ஜனவரி 19-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in