Published : 02 Feb 2018 10:41 AM
Last Updated : 02 Feb 2018 10:41 AM

ஆர்வமே இல்லாத என்னை அரசியலுக்கு வரவழைத்து விட்டனர்: நடிகர் விஷால்

அரசியல் நோக்கமோ, ஆர்வமோ இல்லாமல் இருந்த என்னை அரசியலுக்கு வரவழைத்து விட்டனர் என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தமிழ்நாடு ரெட்டி நலசங்க இளைஞர் சங்க மாநில மாநாடு அக்கிராமத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஜி.ரவி தலைமையேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் ராஜா வரவேற்றார். மாநாட்டில் கர்நாடகா முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட வெங்கட சுப்பு பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு. புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முரளி என்கிற ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசியது:

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, அவருக்காக மாதம் 75 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு பார்த்தனர். அதை மறுத்து 5 ரூபாய் வாடகையில் கூவம் நதிக்கரையோரத்தில் வீடு பிடித்து தங்கினார்.

அவர் முதல்வராக இருந்தபோது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கேட்டார். வாரம் ஒருநாள் விடுமுறை கேட்ட ஒரே முதல்வர் ஓபிஆர்தான். ‘என் தொழில் விவசாயம். விவசாய பணிகளை செய்ய விடுமுறை வேண்டும்’ என்று அப்போது அவர் கூறினாராம்.

அரசியலில் இளைஞர்களும் பங்கேற்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆர். கே நகர் இடைத்தேர்தலில் உங்கள் சார்பாக நான் நின்றேன்.

இந்த சமூகம். இளைஞர்கள் கையில் உள்ளது. அரசியல் நோக்கும், ஆர்வமும் இல்லாமல் இருந்த என்னை அவர்களே (இன்றைய அரசியல்வாதிகள்) அரசியலுக்கு வரவழைத்து விட்டனர். இந்த மேடையில் அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். அரசியலுக்கு வந்தால் நல்லது செய்ய முடியும் என்றால் அரசியலுக்கு வரலாம். அதற்கான நாள் வரும்போது உங்களை நான் சந்திப்பேன் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x