Last Updated : 01 Mar, 2024 08:30 PM

 

Published : 01 Mar 2024 08:30 PM
Last Updated : 01 Mar 2024 08:30 PM

செங்கோட்டையில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் பாராட்டு

செங்கோட்டை: செங்கோட்டை அருகே ரயில் விபத்தை தடுக்க உதவிய தம்பதிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் அதிகாலை சுமார் 1 மணிக்கு 20 மீட்டர் உயர மலைப்பாதையில் பிளைவுட் பலகைகள் ஏற்றப்பட்ட லாரி ஒன்று பயணித்தது. திடீரென அந்த லாரி மலை பாதையில் இருந்து கவிழ்ந்து உருண்டு அருகிலுள்ள ரயில் பாதையில் விழுந்தது. லாரி விழுந்த பலத்த சத்தத்தை கேட்டு அருகில் வசித்த தம்பதியினர் சண்முகையா - வடக்குத்தியாள் இருவரும் வெளியே வந்து விபத்தை பார்த்தனர்.

அந்நேரத்தில் நெல்லை - பாலக்காடு பாலருவி ரயில் வர வேண்டிய நேரம் என்பதை உணர்ந்தனர். உடனே தம்பதியர் டார்ச் லைட்டுகளை ஒளிரச் செய்து அசைத்து கொண்டே ரயிலை நிறுத்த பகவதிபுரம் நோக்கி ரயில் பாதையில் ஓடினர். ஆனால் அன்று நெல்லை - மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிக்காக பாலருவி ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அந்நேரத்தில் புனலூர் நோக்கி திருவனந்தபுரத்திற்கு ஆட்டுக்கால் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில் இயக்க, ஒரு காலி ரயில் பெட்டி தொடர் வந்து கொண்டிருந்தது.

இவர்கள் அசைக்கும் விளக்கொளியை பார்த்து காலி பெட்டி தொடர் ரயிலை நிறுத்தினர். ரயிலின் லோகோ பைலட் மோசஸ், விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டருக்கு முன்பாக ரயிலை நிறுத்தியதால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அறிந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அத்தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டும்படி மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு உத்தரவிட்டார். தம்பதியர் சென்னை சென்றுவிட்டதால், கோட்ட ரயில்வே மேலாளர் அத்தம்பதியை உடனே சந்திக்க முடிய வில்லை.

இதற்கிடையில், கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா புளியரையிலுள்ள தம்பதியர் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்வில் முதுநிலைக் கோட்ட பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் ஆகியோரும் பங்கேற்றனர். இத்தம்பதியர் ஏற்கனவே காட்டாற்று வெள்ளம் வந்து ரயில் பாதை அரித்துச் சென்றபோதும், லாரி ஒன்று ரயில் பாதையில் விழுந்த போதும் ரயில்வே துறைக்கு உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x