Published : 01 Mar 2024 06:10 PM
Last Updated : 01 Mar 2024 06:10 PM

மார்ச் இறுதிக்குள் தொடங்கும் மதுரை ‘எய்ம்ஸ்’ பணிகள் - ‘தேர்தல் நாடகம்’ என குற்றச்சாட்டு

எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக மதுரை தோப்பூரில் ஒதுக்கப்பட்ட இடம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, மத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதனால், மார்ச் மாதம் இறுதியில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) என்ற டெல்லியில் இருப்பதுபோன்ற எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது நாடு முழுவதும் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை, தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில்அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் நேரடியாக நிதி வழங்கிய நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் கட்டுவதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட கடன் பெறுவதற்கு கடன் ஒப்பந்தம் கடந்த 2021 மார்ச்சில் கையெழுத்தானது.

மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82 சதவீதம் தொகையான ரூ1627.70 கோடியை ஜைக்கா நிறுவனத்திடம் கடனாக பெறுவது எனவும், மீதமுள்ள தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜைக்கா நிறுவனத்திடம் தற்போது வரை கடன் பெற முடியவில்லை. இடையில் கரோனா பேரிடர் பாதிப்பு போன்ற பல காரணங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை்கு மட்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. மதுரையுடன் அறித்த நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நிறைந்து பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மருத்துவமனைக்கு தோப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தையும், அருகில் உள்ள மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் நான்கு வழி இணைப்பு சாலை ஒன்றும் போடப்பட்டுள்ளது.

தற்போது எய்ம்ஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடம் புதர் மண்டி கிடப்பதோடு, இந்த மருத்துவமனை பணிக்காக போடப்பட்ட நான்கு வழி இணைப்பு சாலை சிதலமடையத்தொடங்கி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்காவிட்டாலும் இந்த திட்டத்தைக் கொண்டு, தோப்பூர், திருமங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் மட்டும் கொடிக்கட்டி பறக்கிறது. இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ பயிற்சியும் கிடைக்காத காரணத்தால், அவர்களில் 100 பேரை மதுரைக்கு வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பையும் சமீபத்தில் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. அதனால், பழையப்படி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகப் பணிகள் சுறுசுறுப்படைந்தநிலையில் கட்டுமானப் பணி மட்டும் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில், தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஒப்புதல் கிடைக்கப்பெற்று, மார்ச் மாதத்தின் இறுதியில் கட்டுமான பணிகள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்காலிகமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி செயல்படுவதற்கான வாடகை கட்டிடத்திற்கான டெண்டரில் நான்கு கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய நிதிக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மார்ச்சில் நடைபெறவுள்ள நிதிக்குழு கூட்டத்தில் அதற்கான ஒப்புதலும் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால், நடப்பு கல்வி ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மதுரையிலே செயல்பட வாய்ப்புள்ளது, அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நாடகம் - மதுரை எம்.பி குற்றச்சாட்டு: மதுரை ‘எம்.பி’ சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘டெண்டர் இறுதி செய்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு மத்திய அரசு கடந்த 6 மாதத்திற்கு முன்பே மக்களவையில் மார்ச் மாதத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று கூறி வருகிறது.

ஆனால், நாங்கள் மக்களவையில் எய்ம்ஸ் கட்டுமானப்பணியின் ஒவ்வொரு கட்டமும் எந்தெந்த நேரத்தில் முடிக்கப்படும் என்ற விவரங்கள்(construction bar chart) கேட்டிருந்தோம். ஆனால், அந்த விவரங்கள் தற்போது வரை கொடுக்கப்படவில்லை. அந்த விவரங்கள் கொடுக்காதவரை, மத்திய அரசு தேர்தல் நாடகமாகதான் தற்போது டெண்டர் இறுதி செய்து பணிகள் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அதனால், இந்த டெண்டர் இறுதி செய்வதையும் நம்ப முடியாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x