Published : 29 Feb 2024 07:59 AM
Last Updated : 29 Feb 2024 07:59 AM

ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நேற்றுநடைபெற்ற விழாவில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த விழா தொடர்பாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில் `முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்வைத்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய,தூத்துக்குடி மக்களவை தொகுதிஉறுப்பினர் கனிமொழி தொடர்ந்துமக்களவையில் வலியுறுத்திபெற்றுத் தந்த குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்' எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இந்த விளம்பரத்தின் பின்னணியில் ராக்கெட் படம் ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த ராக்கெட்டில் சீன நாட்டின் கொடியில் இருக்கும் அடையாளங்கள் காணப்பட்டன. இதனால் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிஉள்ளார். தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தவிளம்பரம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

இது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த விளம்பரம் திட்டமிட்டு வெளியிடப்படவில்லை. விளம்பரத்தை டிசைன் செய்த நிறுவனத்தினர், கவனிக்காமல் இந்த ராக்கெட் படத்தை வைத்துவிட்டனர். இதைபெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. சாதாரண ஒரு விளம்பரம் குறித்து பிரதமர் பேசியிருப்பது, தமிழகத்தில் அவர்களது தோல்விபயத்தைக் காட்டுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x