Published : 22 Feb 2018 03:36 PM
Last Updated : 22 Feb 2018 03:36 PM

பாலித்தின் பைகளில் உணவுப் பொருள் தருவதை நிறுத்த வேண்டும்: திருப்பூர் ஆட்சியர் உத்தரவு

சூடான உணவுப் பொருட்களை பாலித்தின் பைகளில் கட்டிக் கொடுப்பதை, முற்றிலும் நிறுத்த வேண்டும் என திருப்பூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை சார்பில் வழிகாட்டுதல் குழுக்கூட்டத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது:

இறந்த கோழிகளை விற்பனை செய்யும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் அதை வாங்கி இறைச்சியாக விற்பனை செய்யும் வியாபாரிகள், அந்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி உணவுப்பொருளாக தள்ளுவண்டி மற்றும் உணவகங்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

சூடான உணவுப் பொருட்களை பாலித்தின் பைகளில் கட்டிக் கொடுப்பதும், செய்தித்தாளை பயன்படுத்தி உணவுப்பொருட்கள் கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். உணவகங்கள், பேக்கரி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் சுகாதாரமான முறையில் உணவுப் பொருளை கையாள்வது பற்றி அறிந்திருக்க வேண்டும். போலி தேயிலைத்தூளை வாங்கி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை உணவு பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும்.

குடிநீருக்கு புகார்

மாவட்டத்தில் செயல்படும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் தயாரிப்பு நிறுவனத்தின் தரத்தை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக உணவுப் பாதுகாப்புத்துறையின் வாயிலாக புதிய வலைதளம் www.fssai.gov.in. (packaged water) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான குடிநீர் பற்றி தெரிந்துகொள்ள, மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத்தில் செயல்படும் உரிமம் மற்றும் பதிவு பெறாமல் இருக்கும் அம்மா மருந்தகம் உட்பட அனைத்துத் தரப்பினரும் பிப்.28-க்கு முன் உரிமம் அல்லது பதிவு கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

உரிமம், பதிவு செய்திட மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தமிழ்நாடு அரசு மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கும் பொதுசேவை மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலம். தாங்களாகவே வங்கிக்கு செல்லாமல் நேரடியாக டெபிட், கிரெடிட், நெட் பேங்கிங் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்புத்துறையின் ஆன் -லைன் இணையதளம் வாயிலாகவும் www.fssai.gov.in(Foodlicensing.fssai.gov.in) விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421- 2971190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புகார் எண்

மார்ச் 1-க்கு பின் உரிமம் மற்றும் பதிவு பெறாதவர்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006 மற்றும் 2011-ன் படி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகாம்களில் விண்ணப்பித்தவர்களுக்கு, சான்றிதழ்கள் முகாம் நடைபெற்ற இடங்களிலேயே வழங்கப்படும் என்றார்.

முன்னதாக உணவுப்பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண் 94440 42322 அறிமுகம் தொடர்பாக காட்சிப் பலகை ஆட்சியர் வெளியிட்டார். அனைத்து உணவுப்பொருள் நிறுவனங்களிலும், மேற்படி காட்சிப்பலகை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும் என்றார்.

இதில் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கு.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x