Published : 28 Feb 2024 12:42 PM
Last Updated : 28 Feb 2024 12:42 PM

“திமுக இன்னும் மாறவில்லை” - ப்ளாஷ்பேக் உடன் அமைச்சர் புறக்கணிப்பை விமர்சித்த அண்ணாமலை

சென்னை:“திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று குலசேகரப்பட்டின விழாவினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அப்போது, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். அதேநேரம் தூத்துக்குடியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.

அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்காதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. விரக்தியின் வெளிப்பாடு அவர்களின் கடந்த கால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது. ஆனால் சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் மட்டும் உள்ளது, ஏன் தமிழ்நாட்டில் இல்லை என்பதை திமுகவுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.

இஸ்ரோவின் முதல் ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக இருந்தது தமிழ்நாடுதான். இதற்கான கூட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடுமையான தோள்பட்டை வலி காரணமாக பங்கேற்க முடியாத நிலையில், தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அவருக்காக இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்து, இறுதியில் மதியழகன் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டார். அதுவும் மோசமான ரீதியில் கலந்துகொண்டார். இதுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமரின் நிகழ்வில் கலந்துகொள்ளாததை குறிப்பிடும் வகையில் இவ்வாறு அண்ணாமலை திமுகவை சாடியுள்ளார்.

விளம்பரத்தில் சீன கொடி: குலசேகரப்பட்டினம் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடி உள்ளிட்டோரை வரவேற்கும் விதமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் இன்று தமிழக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இந்த விளம்பரத்தின் பின்னணியில் உள்ள ராக்கெட்டில் இந்திய கொடிக்குப் பதிலாக சீனாவின் கொடி இடம்பெற்றது. இதனை குறிப்பிட்டு பாஜக தொண்டர்கள் தற்போது திமுகவை ட்ரோல் செய்துவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x