Published : 14 Feb 2018 06:05 PM
Last Updated : 14 Feb 2018 06:05 PM

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் ஐ.டி. ஊழியர் கண் விழித்தார்: சந்தேகத்தின் பேரில் இளைஞரைப் பிடித்து விசாரணை, இருசக்கர வாகனம் மீட்பு

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு நகை பணத்தை பறிகொடுத்த ஐடி பெண் ஊழியர் அபாயக்கட்டத்தை தாண்டினார். சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் பறித்துச்சென்ற ராதாவின்  இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று முன் தினம் பணி முடிந்து வீடு நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் தன்னுடிய ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது பின் பக்க தலையில் அடித்ததில் சாலையின் நடுவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவரை கடுமையாக தாக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தரதரவென்று அருகில் உள்ள கட்டடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். அவர் கூச்சலிடவே மீண்டும் தாக்கிவிட்டு அவரது நகைகள், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். போகும் போது அவரது ஆக்டிவா ஸ்கூட்டரையும் பறித்துச் சென்றனர்.

கடுமையான தாக்குதலில் ரத்த இழப்பின் ஊடே தட்டுத்தடுமாறி சாலையோரம் வந்து மயங்கி விழுந்த ராதாவை, காலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துவிட்டு பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீஸார் ராதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ரத்த இழப்பு முகத்தில் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதால் சுய நினைவு இழந்த ராதா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையின் விளைவாக நேற்றிரவு அவர் கண்விழித்தார். அவரது முகத்தில், தலையில் தாக்கியதில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற ஆக்டிவாவை போலீஸார் தேடி வந்த நிலையில் சோழிங்கநல்லூர் அருகே டாஸ்மாக் அருகே சாலையில் தனியாகக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். ஆக்டிவாவில் உள்ள கைரேகைகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. செல்போனை கண்காணிக்கும் பணியிலும் சைபர் பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சூர்யா என்ற இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் எழுந்துள்ளது. வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக இந்த பிரச்சினையில் பெண்கள் அமைப்பினர் விமர்சனம் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x