Published : 27 Feb 2024 05:21 AM
Last Updated : 27 Feb 2024 05:21 AM

மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று கருப்பு கொடி போராட்டம்: மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை: தமிழகம் வரும் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கருப்பு கொடி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மீனவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. சுதந்திரமாக தங்களது தொழிலை மீனவர்கள் செய்ய முடியவில்லை. குறிப்பாக இலங்கை மற்றும் அண்டை நாடுகள் தமிழக மீனவர்களை குறிவைத்து தாக்குகின்றன. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் வலையை கிழிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சிறைப்படுத்துவதும் காலங்காலமாக தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். 10 ஆண்டுகளாக மோடி அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது.

இப்போது 2 நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவருக்கு உச்சபட்சமாக 6 மாதம் சிறை தண்டனையை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது. மோடி அரசு மீனவர்களை முழுவதுமாக கைவிட்டுவிட்டது. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இதைக்கண்டித்து, 27-ம் தேதி ராமேசுவரம் கடலில் இறங்கி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். மேலும், விவசாயிகளுக்கு எதிராகவும் மோடி அரசு செயல்படுகிறது. வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.

கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. கூட்டணி தொடர்பாக டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன்.

விஜயதரணிக்கு 3 முறை எம்எல்ஏ வாய்ப்பு காங்கிரஸ்தான் வழங்கியது. தேசத்தை காப்பவர்கள் காங்கிரஸில் இருப்பார்கள். பயந்தவர்கள் வெளியேறுவார்கள். மிக விரைவில் காங்கிரஸ் தேசிய தலைவர் தமிழகம் வருவார். பாஜக தலைவர்கள், பாஜக அமைச்சர்களுக்கு உண்மையே பேச தெரியாது. ஊழல் கட்சி என்பது பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x