Published : 21 Feb 2024 06:10 PM
Last Updated : 21 Feb 2024 06:10 PM

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்தியது, அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியது, என அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்குகள் அவை .

இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள்தான்.

எனவே, 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை முன் வைத்த வாதம் தவறு.மேலும், கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வேலை வாங்கித் தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத் துறையினரே கூறுகின்றனர். அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என வாதிட்டார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 2,700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்எல்ஏவாக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ,செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x