Last Updated : 21 Feb, 2024 03:07 PM

2  

Published : 21 Feb 2024 03:07 PM
Last Updated : 21 Feb 2024 03:07 PM

“திமுக கூட்டணியில் இருந்து விரைவில் வெளியேறும் கட்சிகள்...” - இபிஎஸ் கணிப்பு

மதுரை: “திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசிக்கொண்டுதான் வருகின்றனர். இன்னும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என பொறுத்து இருந்து பாருங்கள்" என்று இபிஎஸ் கூறினார்.

நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல்வேறு திட்டங்கள் இதுவரையிலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டாகிய நிலையில், அதற்கு நிதி ஒதுக்கி பணியை தொடங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மதுரைக்கு குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கினோம். இதற்கான பணிகளும் சுணக்கமாகவே உள்ளது.

பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைகின்றனர். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது அவர்களது ஜனநாயகம். போகின்றவர்களை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு. கட்சி மாறுவது அவரவர் மன நிலையை பொறுத்தது.

விருதுநகரில் ஜவுளி பூங்காவுக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. எங்களது ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு திமுக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது.

தேர்தலில் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும் ‘சீட்’ அடிப்படையில் வாரிசு அரசியலை தீர்மானிக்க முடியாது. திமுகவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர். அது கட்சி அல்ல. ஒரு கம்பெனி. தலைமைக்கு யார் வருகின்றனர் என்பதை பொறுத்துதான் முடிவாகும். திமுகதான் வாரிசு அரசியல் செய்கிறது. அது ஒரு குடும்பக் கட்சி. திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அதற்கு பிறகு அவரது மகன் உதயநிதி... இதற்கு பெயர்தான் வாரிசு அரசியல். ஒரே குடும்பத்தின் கையில் ஒரு கட்சி இருக்கிறது.

ஒரு குடும்பத்தின் கைக்குள் ஒரு கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்களது கொள்கை. அதிமுகவில் சாதாரண தொண்டன் என்னை போன்று உயர்ந்த பொறுப்புக்கு வரமுடியும்.

தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவாகும். மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திதான் வாக்கு கேட்க வேண்டும் என்பதில்லை. பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கடந்த 2014-ல் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்கு கேட்கவில்லை” என்றார்.

த்ரிஷா மீதான அவதூறு பேச்சு குறித்து கேட்டதற்கு, “வேறு கட்சியிலிருந்து வந்தவர் ஏ.வி.ராஜூ. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை கட்சியில் வைத்திருந்தோம். கட்சியின் கட்டுப்பாடு, விதிகளை மீறியதால் ஏ.வி.ராஜூ ஏற்கெனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கூறுவதை எல்லாம் பெரிது படுத்தக் கூடாது. பதவி இல்லாத விரக்தியில் அவர் பேசுகிறார்" என்றார்.

சசிகலா, ஓபிஎஸ் காரில் அதிமுக கொடிகட்டி பயணிப்பதாக கேட்டதற்கு, “அவர்களின் காரில் அதிமுக கொடி கட்டி இருக்கும் ஆதாரங்களை வழங்குங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, "திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசிக்கொண்டு தான் வருகின்றனர். இன்னும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என பொறுத்து இருந்து பாருங்கள்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றம் தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் ஆசை நிறைவேறாது.

மேகேதாட்டு விவகாரத்தில் அதிமுக அரசு நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டது. இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு திராணி இருந்தால் வழக்கு போட சொல்லுங்கள். மேகேதாட்டு அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு. இப்பிரச்னையில் எங்கு எதை பேசவேண்டுமோ, அதை பேச திமுக அரசு தவறிவிட்டது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் சட்ட ம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்கள் திமுக அரசின் மீது கொந்தளிப்பாக உள்ளனர். இதே ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனாலும்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x