Published : 16 Feb 2018 03:47 PM
Last Updated : 16 Feb 2018 03:47 PM

கருணாநிதி எந்த காலத்தில் காவிரி நீரை பெற்றுத்தந்தார்?- மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

காவிரி பிரச்சினையில் ஸ்டாலின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், 'கருணாநிதி எந்த காலத்தில் காவிரி நீரை பெற்றுத்தந்தார்?' என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பதிலளித்தார்.

அப்போது அவர், "தீர்ப்பின் முழு விவரமும் உள்ளே இருக்கக்கூடிய ஷரத்துக்கள் எல்லாம் அரசுக்கு முழுமையாக வரப்பெற்றபின் அரசின் கருத்தை தெரிவிக்கிறோம்"

மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது என்று தீர்ப்பு வந்துள்ளதே?

ஆமாம், ஜெயலலிதா காவிரி நீரை பெறுவதில் எவ்வாறெல்லாம் கடும் முயற்சிகள் மேற்கொண்டார் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் விசாரணை 17 ஆண்டுகாலம் முடிந்து உடனடியாக 2007-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக ஜெயலலிதா இது பற்றி கூறும்போது 17 ஆண்டுகள் போராடி பெற்ற இறுதி தீர்ப்புக்கு முழு அதிகாரம் பெறப்பட வேண்டும் என்றால், மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்றார்.

அப்போது ஆண்டு கொண்டிருந்த திமுக மற்றும் காங்கிரஸ் அரசுகள் மத்திய அரசின் அரசிதழில் தீர்ப்பை வெளியிடுகின்ற பொறுப்பு உள்ளது. 24 மணி நேரத்தில் உடனடியாக வெளியிட வேண்டும், மேற்கொண்டு நீர் எங்களுக்கு பற்றாகுறையாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார். இது 2007-ல் நடந்தது. 2011 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கெஜட்டில் உச்ச நீதிமன்ற இறுதித்தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

ஆனால் 2013 வரை காங்கிரஸ் அரசு அதை செய்யத்தவறியதால் உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று உச்ச நீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தித்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுத்தந்தார்.

அப்போது தஞ்சையில் அவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தன்னுடைய 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையின் வெற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பைப் பெற்ற நாள் தான் என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் ஒவ்வொரு முயற்சியிலும் காவிரி நீரை பெறுவதில் நம்முடைய உரிமையை காவிரி நீரை டெல்டா விவசாயிகளுக்கு கொண்டு வந்து சேர்த்ததில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிக்கண்டார் என்பது வரலாறு. அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ளே இருக்கும் பிரச்சினைகள், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அரசின் சார்பில் அறிக்கை அளிப்போம். 177.25 டிஎம்சி நீர் அளிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி அந்த நீரை தமிழக மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டு அந்த நீரை பெறுவோம்.

திமுக தலைவர் கருணாநிதி பெற்றுத்தந்த காவிரி நீரை கைவிட்டு விட்டதால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கூறி உள்ளாரே?

திமுக எந்தக்காலத்தில் காவிரி நீரை பெற்றுத்தந்தது? உரிமையை பெற்றுத் தந்தது? உங்கள் கேள்வியே தவறு. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்புத்தான் 2007 வந்தது. அதை அரசிதழில் வெளியிட, அரசாணையை பெற்றுத்தர கூட இவர்களால் முடியவில்லை. மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசும் மாநிலத்தில் திமுகவும் தான் ஆட்சியை ஆண்டார்கள் ஆனாலும் அரசாணையைக்கூட பெற்றுத்தர இயலாத அரசாகத்தான் இவர்கள் ஆண்டார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x