வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ் முதல் த்ரிஷா கொந்தளிப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.20, 2024

வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ் முதல் த்ரிஷா கொந்தளிப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.20, 2024
Updated on
3 min read

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு; கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தேர்வு செய்யப்பட்ட 2482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு; பயிர் உற்பத்தித் திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டதுக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு...

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு மற்றும் பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு; நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்; ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்; இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன.

தமிழக வேளாண் பட்ஜெட் - ஸ்டாலின் பாராட்டு | இபிஎஸ் விமர்சனம்: “உழவர்கள் வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம். திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது. மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன்” என்று வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு பலனில்லை. திட்டம் எதுவும் இல்லை. வேளாண் கல்லூரி சார்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட் இது" என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தம் @ செய்யாறு: தங்களுக்கு எதிராக எ.வ.வேலு தெரிவித்த பொய்யான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும், தொடர்ந்து போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை நீக்கக் கோரியும், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்கச் செல்ல முயன்றபோது, செய்யாறு பகுதியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மேல்மா சிப்காட் திட்ட எதிர்ப்பு இயக்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: கே.பாலகிருஷ்ணன் கருத்து: “மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

“சந்தேஷ்காலியில் நிலைமை பயங்கரம்” - சுவேந்து அதிர்ச்சி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலிக்குச் சென்று பார்வையிட்ட பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, நிலைமை மிக மிக மோசமாக உள்ளது என்றும், சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக இல்லை என்றும் கூறினார்.

மராத்தா சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் விவசாயிகள், கொல்லர், தச்சர் உள்ளிட்ட 96 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மராத்தா சமூகத்தினராக கருதப்படுகிறார்கள். இவர்கள் இம்மாநிலத்தில் 28 சதவீதம் உள்ளனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாங்கள் பின்தங்கி இருப்பாகவும், எனவே, தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற உத்தரவும், சண்டிகர் மேயர் தேர்தல் முடிவும்!: சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு, தேர்தல் அதிகாரியால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லும் வாக்குகளாகக் கருதி மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, “8 வாக்குச்சீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளது தெரிகிறது. ஆனால், வாக்குச்சீட்டை செல்லாததாகக் கருதும் நோக்கத்துக்காக தேர்தல் அதிகாரி அனில் மசிக் தனது பேனாவால் அதில் அடையாளம் வைத்துள்ளார். இதன் மூலம் தேர்தல் அதிகாரி சட்ட விதிகளை மீறியுள்ளார். மனுதாரருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகிறது.

எனவே, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி. அவர் மீது வழக்குப் பதிய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘இனி என்ன நடந்தாலும் அரசே பொறுப்பு’: “நாங்கள் டெல்லி நோக்கி முன்னேறுவது நிச்சயம். புதன்கிழமை காலை 11 மணியளவில் டெல்லியை நோக்கி முன்னேறுவோம். இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்பு” என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய அரசின் புதிய முன்மொழிவை நிராகரிப்பதாக விவசாய அமைப்புகள் கூட்டாக இணைந்து தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

நடிகை த்ரிஷா கொந்தளிப்பு: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் எடப்பாடி பழனிசாமி மீதும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்தார். அந்தச் சம்பவத்துடன் த்ரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசிய அவதூறு கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக உரிய, கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்” என்று கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

ஆருத்ரா நிறுவன இயக்குநர் ரூசோவின் ஜாமீன் ரத்து: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in