Published : 20 Feb 2024 09:26 AM
Last Updated : 20 Feb 2024 09:26 AM

‘இனி என்ன நடந்தாலும் அரசே பொறுப்பு’ - டெல்லி பேரணி; விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை

சர்வன் சிங் பாந்தர், ஜக்ஜித் சிங் தல்லேவால் (இடமிருந்து வலமாக)

புதுடெல்லி: “நாங்கள் டெல்லி நோக்கி முன்னேறுவது நிச்சயம். நாளை (பிப்.21) காலை 11 மணியளவில் டெல்லியை நோக்கி முன்னேறுவோம். இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்பு” என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் முன்மொழிந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசின் புதிய முன்மொழிவை நிராகரிப்பதாக விவசாய அமைப்புகள் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று (பிப்.20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அரசாங்கத்தின் பேச்சின் மூலம் போராட்டம் டெல்லிக்குள் நுழைவதைத் தடுப்பதே அதன் நோக்கம் என்பது புலப்படுகிறது. அவர்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட விருப்பம் இல்லை என்றால் நாங்கள் டெல்லி நோக்கி முன்னேறித்தான் ஆக வேண்டும். எங்களின் அறவழிப் போராட்டத்தைத் தடுக்காமல் அனுமதிக்க வேண்டும். எங்கள் பேரணியைத் தடுக்க ஹரியாணாவில் போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பார்த்தால் அது காஷ்மீரை நினைவுபடுத்துகிறது. நாங்கள் டெல்லியை நோக்கிச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்தது. டிராக்டர் டயர்களைக் குறிவைத்து சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது என ஹரியாணா டிஜிபி சொல்லியிருந்தார். ஆனாலும் பயன்படுத்தப்பட்டது. இனி, என்ன நடந்தாலும் நாங்கள் முன்னேறுவோம். அதேபோல் இனி நடப்பவை அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பு.

அரசாங்கம் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் தர மறுத்தால், விவசாயிகள் சுரண்டப்படுவது நீடிக்கும். அதை அனுமதிக்க முடியாது. நமது அரசாங்கம் ரூ.1.75 கோடிக்கு பாமாயில் இறக்குமதி செய்கிறது. அந்த எண்ணெய்யால் மக்களுக்கு தீங்குதான் ஏற்படுகிறது. அதற்குப் பதிலாக அந்தத் தொகையை இங்கே உள்ள விவசாயிகள் எண்ணெய் வித்துக்களை பயிரிட கொடுத்து உதவினால், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தால் நன்மை கிடைக்கும்.” என்று கூறியுள்ளார்.



FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x