

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ. 42,282 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு கொண்ட இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் முழுமையாக...
> ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தேர்வு செய்யப்பட்ட 2482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு .
பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம் - ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு:
> ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர் - விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைத்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
> ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் மேம்பாட்டு பயிற்சிகள்: பணித்திறனையும், தொழில்நுட்ப அறிவினையும் மேம்படுத்தி, வேளாண் மேம்பாட்டினை எய்தும் வண்ணம் விவசாயிகளுக்கும், படித்த இளைஞர்களுக்கும், அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கிட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
செங்கல்ராயன், வேலூர், செய்யாறு, அறிஞர் அண்ணா, பெரம்பலூர், தர்மபுரி, எம்.ஆர்.கே ஆகிய சர்க்கரை ஆலைகளில் நீர் சுத்திகரிப்பு நிலைய அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்றி நிறுவிட ரூ.1.39 கோடி.
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ.41.35 கோடி ஒதுக்கீடு.
குளிர் மண்டலப் பழப்பயிர்களான பிளம்ஸ், பேரிக்காய் ஆகியவற்றின் தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரித்திட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
ஐந்திணை நிலங்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்த முல்லை, மருத நிலப்பூங்காக்கள், கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம், தென்காசி-நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்காகவும், உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யவும் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு.
தொகுப்புமுறை சாகுபடி: மல்லிகை, பலா, மிளகாய், கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் தொகுப்புமுறை சாகுபடியினை ஊக்குவிக்க தோட்டக்கலை வல்லுநர்களால் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
> அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான திட்டங்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் போன்ற தகவல்களை, விவசாயிகள் எளிதில் அறியும் வண்ணம் தகவல் மையம் அமைக்கப்படும்.
> பருவமில்லா காலங்களிலும் முருங்கை உற்பத்தியினை ஊக்குவிக்க முதற்கட்டமாக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நெகிழி விரிப்பான் கொண்டு முருங்கை மரத்தினை மூடும் தொழில்நுட்பம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியியல் துறையும், வேளாண் அறிவியல் நிலையங்களும் இணைந்து விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறைகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு.
வேளாண் கண்காட்சிகள்: விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும்.
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை: பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX) என்ற தனி அமைப்பின் மூலம், தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முதன்மை பதப்படுத்தும் மையங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள்
அரிசி, மா, வாழை, கொய்யா, தக்காளி, மிளகாய் போன்ற வேளாண் விளைபொருட்களுக்கும், கடல் சார் மீன் பொருட்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகள் உருவாக்குதல் என, TNAPEX இன் திட்டங்கள் மொத்தம் ரூ. 72 கோடியில் செயல்படுத்தப்படும்.
நீர்வளத்துறை: தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ரூ 110 கோடியில், 919 பணிகள்.
கால்நடை பராமரிப்பு: பசுந்தீவன ஊடுபயிர் செய்து பால் உற்பத்தியை உயர்த்திட 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ. 2 கோடி மானியம்.
மீன்வளம்: மீன்வளர்ப்போரின் வருவாய் உயர்வதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரித்திட புதிதாக நன்னீர்
மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல், இடுபொருள் மானியம், மீன்தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.
ஊரக வளர்ச்சி: இயற்கைவள மேம்பாட்டுப்பணிகள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத் தண்டுகள், அமிழ்நீர் குட்டை, கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு.
தென்னை நாற்றுப்பண்ணைகள்: தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைபில் ஆர்வமுள்ள, பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு.
விதை உற்பத்தி தொகுப்புகள்: பயறு வகைகள், எண்ணெய்வித்துகளில், 100 விதை உற்பத்தித் தொகுப்புகள் அமைத்து, பயிற்சியுடன் விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம்.
எரிசக்தித் துறை: 23.51 இலட்சம் வேளாண் பாசன இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ. 7,280 கோடி நிதி ஒதுக்கீடு.
பனை பொருள் வளர்ச்சி: பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும்; 200 பனைத்தொழிலாளர்களுக்கு, மதிப்புக் கூட்டுப் பொருட்கள் பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் பயிற்சியும், உரிய கருவிகளும் ரூ. 1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ. 42,281.88 கோடி