Last Updated : 19 Feb, 2024 09:30 PM

3  

Published : 19 Feb 2024 09:30 PM
Last Updated : 19 Feb 2024 09:30 PM

இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: இரு மத பெண்களை மணந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், உடலுக்கு இந்து மதப்படி இறுதி சடங்கு செய்யவும், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடி பர்மா காலனி வள்ளூவர் நகரைச் சேர்ந்த சாந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர்உசேன் (55) என்பவருக்கும் 1988-ல் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் எனக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தோம்.

கடந்த 2019-ல் என் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து ரத்து பெற்றார். விவாகரத்தை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்தேன். விவாகரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் என் கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், என் கணவர் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. என் கணவர் உடலை இந்து மத வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்வதற்காக கணவர் உடலை என்னிடம் ஒப்படைக்கக் கோரி போலீஸில் புகார் அளித்தேன். ஆனால் சையது அலி பாத்திமா என் கணவர் உடலை இஸ்லாமிய மதச் சடங்குகள் செய்து அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

என் கணவர் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. என் கணவருக்கு நான் தான் சட்டப்படியான வாரிசு. இந்து மதச் சடங்குபடியே கணவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். எனவே கணவரின் உடலை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனையில் உள்ள மனுதாரரின் கணவர் உடலை முதலில் முதல் மனைவியான மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் கணவர் உடலுக்கு அவர் சார்ந்த மத முறைப்படி இறுதி சடங்கு செய்து, அரை மணி நேரத்தில் காரைக்குடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திடம் உடலை ஒப்படைக்க வேண்டும். பின்னர் உடலுக்கு அவர் 2-வது மனைவி இறுதி மரியாதை செய்து இஸ்லாமிய சடங்குபடி அடக்கம் செய்யலாம். வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x